பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்து என்ன என்பதை அம்மாநில முதல்வர் லோக் சம்வத் என்ற மக்கள் மன்றத்தின் மூலம் மக்களை சந்தித்து கேட்டறிந்தார். இந்த மக்கள் மன்றத்தில் அழைப்பில்லாமல் ஆஜரான பாரதிய ஜனதா கட்சி முதல்வர் நிதீஷ்குமாரின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து கருத்துக்களை முன்வைத்தது.

nitish_susheel

பாரதிய ஜனதா கட்சி இந்த புதிய மதுவிலக்கு சட்டத்தின் நான்கு குறிப்பிட்ட அம்சங்களை கடுமையாக எதிர்க்கிறது. அவையான:

  1. திரும்ப திரும்ப மதுவிலக்கை மீறும் கிராமங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அபராதம்
  2. மதுவிலக்கை மீறுவோருக்கு கிடைக்கும் தண்டனை; இது கொலை, கற்பழிப்பு குற்றங்களுக்கு கிடைக்கும் தாண்டனையைவிட கொடூரமாக இருக்கிறது.
  3. ஒரு வீட்டில் மது கண்டுபிடிக்கப்பட்டால் வீட்டிலுள்ள அத்தனை பெரியவர்களையும் சிறையில் தள்ளுவது
  4. ஒரு வீட்டில் மது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே சூறையாடுவது.

இந்த நான்கு விஷயங்களும் புதிய மதுவிலக்கு சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஜக இத்திட்டம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பீகார் மாநில பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷீல் மோடி பூரண மதுவிலக்கு பற்றி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். பாஜக பூரண மதுவிலக்கை வரவேற்கிறது. ஆனால் அந்த பூரண மதுவிலக்கை அமல்படுத்த நிதீஷ்குமாரின் அரசு தாலிபான் பாணியில் எடுத்துவரும் கொடுங்கோல் நடவடிக்கைகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்நீதி மன்றம் பழைய மதுவிலக்கு திட்டதை ரத்து செய்ததுபோல உச்ச நீதிமன்றமும் புதிய மதுவிலக்கு திட்டத்தை ரத்து செய்துவிடும் என்ற பயத்தில்தான் முதல்வர் நிதீஷ்குமார் தற்போது மக்கள் மன்றத்தை கூடியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.