சென்னை: சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவன், தனது மகன் தானாக கழுத்தை அறுக்கவில்லை.. போலீசார்தான் அவனது கழுத்தை அறுத்தனர் என்று கூறியுள்ளார்.
paramasivan-says-Swathi-Ramkumar-did-not-killed_SECVPF
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை தொடர்பாக தினசரி பல்வேறு தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த  நிலையில் ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியதாவது:-
ராம்குமார் கல்லூரி தேர்வில் 5 பாடங்களில் பெயிலானதால், சென்னைக்கு சென்று சிறப்பு வகுப்பில் சேர்ந்து படித்து பாஸ் செய்ய வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கை செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி அதை வாங்குவதற்காக ஊருக்கு வந்தார். அப்போதுதான் நள்ளிரவில் போலீசார் வந்து ‘முத்துக்குமார் முத்துக்குமார்’ என்று கூப்பிட்டனர். சத்தம் கேட்டு எனதுமகள்  கதவை திறந்தார். வீட்டிற்கு வெளியே நின்ற போலீசார், உங்கள் மகன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்று கூறினர்.
ஆனால், ராம்குமார், அவனாகவே கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லை. போலீசார்தான் எனது மகனின் கழுத்தை அறுத்து விட்டனர்.
இந்த வழக்கை பொறுத்த வரை ஐகோர்ட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த நெருக்கடியாலேயே போலீசார் எனது மகன்தான் குற்றவாளி என்று தவறாக அடையாளம் காட்டி உள்ளனர். ஒன்றும் அறியாத அப்பாவியான ராம்குமாரை கைது செய்திருக்கிறார்கள். சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தார் என்பதை ஏற்க மாட்டேன்.
இந்த வழக்கை  சட்டப்பூர்வமாக அணுகி எனது மகன் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றும் வழக்கில் இருந்து ராம்குமார் கண்டிப்பாக விடுதலையாவான் என்றும் கூறினார்.