பொள்ளாச்சி
பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தாக 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தமிழக அரசு மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கை வழியாக இந்தியை திணிப்பதாக தெரிவித்து திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுகவை சேர்ந்த 5 பேர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர்.
அதாவது தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் ‘பொள்ளாச்சி சந்திப்பு’ என எழுதப்பட்டு இருந்த நிலையில், நடுவில் இருந்த இந்தி எழுத்தை மட்டும் அவர்கள் அழித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் 3 மணி நேரத்தில் இந்தி எழுத்துக்களை அழித்த அதே பெயர் பலகையில் மீண்டும் இந்தியில் பெயர் எழுதப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவை சேர்ந்த 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாலக்காடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.