கீழேயுள்ள புகைப்படம் கடந்த மாதம் ராயல் புரூணையின் சமூக வளைத்தலத்தில் பகிரப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தின் கேபினில் அமர்ந்திருக்கும் முதல் முழு-மகளிர் விமான குழுவினுடையது.

கடந்த மாத இறுதியில் ராயல் புரூணை பெண்கள் மட்டுமே குழுவினராகக் கொண்ட முதல் விமானத்தை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்து இந்த மைல்கல்லை எட்டிய விமானச் சேவை நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றது.
பெண்களே இயக்கிய விமானம் என்பதை விட அவர்கள் எங்கே தரையிறங்கினார்கள் என்பது தான் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
கேப்டன் ஷரீஃபாஹ் சரெனாவும் அவருடைய இரண்டு பெண் முதன்மை அதிகாரிகளும் புரூணையிலிருந்து ஜிட்டாஹ் என்ற சவுதி அரேபியாவின் இராண்டாவது பெரிய நகரத்திற்க்கு அதுவும் பெண்கள் வாகனம் ஓட்டவே அனுமதிக்கப்படாத நாட்டிற்கு பறந்து வந்திறங்கினர்.
மூன்று வாரங்களுக்கு முன்னரே இந்தப் புகைப்படத்தைப் புரூணை விமான நிறுவனம் பகிர்ந்திருந்தாலும், இதனை “பெண்கள் வாகனம் ஓடுவதை அனுமதிக்காத நாட்டில் அனைத்துப் பெண்கள் குழு கொண்ட விமானம் வந்திறங்கியது” என்ற தலைப்பில் ரேட்டிட் நிறுவனம் மறு பதிவு போட்ட பின்னரே செய்திகளிலும் சமூக வளைத்தலங்களிலும் மிகவும் பிரசித்திப் பெற்றது.
பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்துள்ள சவுதி அரேபியாவிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கக் கூடாது அதாவது சட்டப்படி அவர்கள் வாகனம் ஓட்டவே கூடாது என்று மதத் தீர்ப்புகள் கூறுகின்றன. ஆனால் நடைமுறையில் எப்பொதும் இதனைப் பின்பற்றுவதில்லை. பெதொயின் பெண்களும் தென் மாகாணத்தில் உள்ள பெண்களும் அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் அடிக்கடி வண்டி ஓட்டுவர். சன்னி ராஜ்ஜியத்தின் பெண்களுக்கான பல விதமான தடைகளின் அடையாளமாகப் பெண் ஓட்டுனர்களுக்கு தடை என்பது இந்த நவீன உலகத்திலும் அமலில் உள்ளது.
பெண் விமானிகளின் விஷயத்தில் சவுதி அரேபிய அரசின் கொள்கைகள் நாம் நினைக்கும் அளவிற்கு மிகவும் கண்டிப்பானதாக இல்லை. 2014ல் ஹனாதி அல் ஹிந்தி என்ற பெண்மணி முதல் சவுதி பெண் விமானியாக உரிமமளிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் பல பெண் விமானிகள் பறக்க ஆரம்பித்தனர். அவரது விமானம் ஓட்டும் திறனைப் பார்த்துச் சவுதி இளவரசர் தலால் சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட வேண்டுமேன கூறினார்.
இருந்தாலும் 2014 வரை சவுதி பெண்கள் வாகனம் ஓட்டியதற்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதியில் மட்டுமில்லாமல் தெங்கிழக்கு ஆசியாவிலேயே முதல் பெண் விமானியான சரேனா அவர்கள் “புரூணை டைம்ஸ்” என்ற நாளிதழுக்குக் கூறுகையில் ” பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விமானிப் பணியில் தாம் பணியாற்றுவது ஒரு பெண்ணாகவும், ஒரு புரூணைப் பிரஜையாகவும் மிகுந்த பெருமையளிப்பதாகவும், இன்றையப் பெண்கள் தாம் கொண்ட லட்சியங்களை அடைய முடியும் என்பதைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்”.