saudi king
ரியாத்- தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இஸ்லாமியநாடுகளை ஒருங்கிணைத்து நேட்டோ பாணியில் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா  இறங்கி உள்ளது.
எந்தவொரு தனிப்பட்ட நாட்டிற்கு எதிராகச் செயல்படுத்துவதற்காக இந்தக் கூட்டணியை அமைக்கவில்லை.  ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவே இந்தக் கூட்டணியை அமைக்க விரும்புவதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட 34 நாடுகளைக் கொண்ட ராணுவக் கூட்டணியை அமைப்பதற்கான அடிப்படை வேலைகளில் பாகிஸ்தான் முன்னரே ஈடுபட்டுள்ளது.பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப்பும், அந்நாட்டு ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்பும் சமீபத்தில் சவுதி அரேபியாவுக்கு 3 நாள் அரசுப் பயணம்  மேற்கொண்டனர். பயண இறுதியில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவப்பயிற்சியை அவர்கள் பார்வையிட்டனர். இதன்பிறகே சவுதி அரேபியா இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது பற்றிய பயிற்சியை மேற்கொள்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 நாடுகள் வட சவுதி அரேபியா பகுதியில் சமீபத்தில்  கூட்டு ராணுவப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் பங்குபெற்றவை அனைத்தும் முஸ்லிம் நாடுகளை மட்டும் சார்ந்தவையா என்பது தெரியவில்லை.இக்கூட்டணியில் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாகவும் சவுதி அரேபியாவுக்கு எதிரியாகவும் விளங்கும் நாடான ஈரான் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதா? இல்லையா என்பதும் சரிவரத்தெரியவில்லை.
இந்தக்கூட்டுப் பயிற்சி நடவடிக்கைக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் சன்னி முஸ்லிம்களை கொண்ட அரேபிய நாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.