“பழைய பேப்பர்” என்கிற புதிய பகுதி இன்றுமுதல் வெளியாகிறது. பல்வேறு கட்சிகள், தலைவர்கள் கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள், பேச்சுக்கள் இந்த பகுதியில் வெளியாகும்…  கட்சி பேதமின்றி!
 
k
 
டந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, 2013 டிசம்பரில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
பரபரப்பான சூழலில் நடந்த அந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு ‘2014 பாராளுமன்ற தேர்தலில்  தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம்” என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார்.
முன்னதாக பொதுக்குழுவில் பலர் பேசினர். அவர்களில் திருச்சி சிவா பேசியது இது:
“காங்கிரஸ் கட்சியால், தி.மு.க., அடைந்த காயங்கள், கஷ்டங்கள் ஏராளம். ‘2ஜி வழக்கில், கனிமொழிக்கு தொடர்பில்லை’ என, சி.பி.ஐ., அதிகாரி கூறினார். ஆனால், கனிமொழி சிறைவாசம் அனுபவித்தார். 2ஜி வழக்கில், ராஜாவை குற்றம் சாட்டினர். அது, தி.மு.க., மீது பழி போடுவதற்கு தான்.சட்டசபை தேர்தல், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை, அறிவாலயத்தில் நடந்த போது, மாடியில், சி.பி.ஐ., அதிகாரிகள், ‘ரெய்டு’ நடத்தினர். இலங்கை தமிழர் பிரச்னையில், கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது, ‘போர் நிறுத்தம் வந்து விட்டது’ என, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, ‘பேக்ஸ்’ அனுப்பி, காங்கிரஸ் நம்மை ஏமாற்றி விட்டது. மக்களிடம் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து விட்டது” என்றார்.
பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், கருணாநிதி அளித்த பேட்டியில், “வரும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., தனியாக நின்றாலும், நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற, நன்றி மறந்து செயல்படுகின்ற, காங்கிரசுடன் மீண்டும் சேருவோம் என்று தயவு செய்து யாரும் எண்ண வேண்டாம். 2ஜி வழக்கில், தி.மு.க.,வை சிக்க வைத்து, ராஜாவையும், கனிமொழியையும் சிறையில் அடைத்தனர். அந்த காயம் ஆறாத வடுவாக உள்ளது. அந்தக் காயம், ராஜாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காயம் மட்டுமல்ல; தி.மு.க., வுக்கும் ஏற்பட்ட காயம். சி.பி.ஐ., யார் கையில் உள்ளது. அதை எப்படி எல்லாம் பயன்படுத்தினார்கள், என்பதை நாங்கள் அறிவோம். நம்முடன் அணிசேர எந்தக் கட்சியும், விரும்பாவிட்டாலும், அதற்காக கவலைப்படப் போவதில்லை; தனியாக நிற்போம்!” என்று ஆவேசமாக கூறினார் கருணாநிதி.