b

டிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே சரத்குமார் டென்சன் ஆகத்தான் இருக்கிறார். இத்தனை வருடங்கள் பொறுப்பில் இருந்துவிட்டு இப்போது தேர்தலை சந்திக்க வேண்டுமா என்பதுதான் அவருக்கும் அவரது அணியினருக்கும் எழும் ஆதங்கக் கேள்வி.

விஷால் அணியினருடன் சமாதானமாக போய், தேர்தலை நிறுத்த முயற்சித்தார். இவருக்காக தூது சென்றவர்கள், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டது விஷால் அணி.

ஆகவே கடந்த பல நாட்களாகவே, “தேர்தல் நடந்தால் நடிகர்களிடையே ஒற்றுமை போய்விடும். இனி இணைந்து செயல்படவே முடியாது” என்று மிரட்டல் தொண்யில் கூறி வருகிறார்.

இந்த நிலையில், “ஏற்கெனவே நடிகர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா.. நடிகர்களுக்கு பிரச்சினை வந்த போது நடிகர் சங்கம் முன்வந்து உதவியதா” என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் நடுநிலை வாக்காளர்கள்.

அவர்கள் கூறுவதாவது:

“2010ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் விழா நடத்தினார்கள் நடிகர்கள். அந்த விழாவில், அஜீத் பேசியது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.

அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பே, “அய்யா.. இந்த விழாவுக்கு வரும்படி சிலர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தைரியமாக பேசினார்.

அவரது பேச்சுக்கு நடிகர் ரஜினி, எழுந்து நின்று விசிலடித்து வரவேற்றார்.

மறுநாள் கருணாநிதி இல்லத்துக்கு அஜீத் அழைக்கப்பட்டார். இந்த நிலையில், கருணாநிதி தரப்பிலிருந்து அஜீத்துக்கு “கட்டாய அடைவைஸ்” செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த சமயத்தில் அஜீத் தனித்து விடப்பட்டார். ஒட்டுமொத்த நடிகர்களின் ஆதங்கத்தை வெளிப்படையாக முதல்வர் முன் பேசிய அஜீத்தை கைவிட்டது சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம்.

அதே போல கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலுவை, தேர்தல் முடிவுக்குப் பிறகு முற்றிலுமாக ஒதுக்கியது திரையுலகம். அவரை நடிக்க வைத்தால் முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்திலேயே இது நடந்தது.

சிறந்த நடிகராக மட்டுமின்றி, மார்க்கெட் உள்ள ஸ்டார் நடிகராக உலாவந்த வடிவேலுவுக்கு படமே இல்லாமல் போனது. இந்த நேரத்திலும் சரத்குமார தலைமையிலான நடிகர் சங்கம் ஒதுங்கிக்கொண்டது.

நடிகர் எஸ்.வி. சேகருக்கும் தொடர்ந்து பல மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. இப்போதும் வருகின்றன. அவரது வீட்டில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. இது குறித்தும் இதுவரை நடிகர் சங்கம் வாய் திறக்கவில்லை.

கற்பு பற்றி நடிகை குஷ்பு கருத்து கூறியபோது சில அமைப்புகள் அவருக்கு எதிராகi தமிழகம் முழுதும் வழக்குகளைத் தொடர்ந்து அலைக்கழித்தன. அதோடு அவர் வீட்டு முன்பு விளக்குமாறு ஏந்தி போராட்டம் நடத்தியும் மன உளைச்சலை ஏற்படுத்தினர்.

இந்த சமயத்திலும் குஷ்புவுக்கு பக்கபலமாக நடிகர் சங்கம் ஒரு அறிக்கை கூட விடவில்லை.

சில படங்களின் வெளியீடுகளில் ஏற்படும் பிரச்சினைகளில் மட்டும் நடிகர் சங்கம் தலையிட்டது. இது பணம் தொடர்பான பிரச்சினை என்பதாலோ என்னவோ இதில் மட்டும் ஆர்வம் செலுத்தினர்.

ஆகவே, “இனி நடிகர்களுக்குள் ஒற்றுமை இருக்காது என்று சரத் மிரட்ட வேண்டாம். ஏற்கெனவே என்ன நன்மை செய்துவிட்டார்” என்று கேள்வி எழுபபுகிறார்கள் அந்த நடுநிலை வாக்காளர்கள்.