dmkvscong

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்றதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே காரணம்” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “நெருக்கடிநிலை காலகட்டத்துக்கு முன்பே இந்திரா காந்தியின் பேச்சுகள், நடவடிக்கைகளில், திமுக மீதான ஒரு கசப்புணர்வு இருந்திருப்பதை உணர முடிகிறது. பின்னாளில், திமுகவைத் தடைசெய்ய வேண்டிய இயக்கமாகக்கூட இந்திரா கருதியிருக்கிறார்.

இத்தனைக்கும் 1971 தேர்தலில் இந்திரா காந்தியுடன் கூட்டணி உறவுகொண்டே திமுக போட்டியிட்டிருக்கிறது. உறவு கசப்படைய என்ன காரணம்? முன்னதாக மொழிப்போர் அனுபவங்கள், சுயாட்சிக் கொள்கை போன்ற விஷயங்கள் ஏதேனும் திமுகவிடம் அவருக்கு ஒவ்வாமையை உருவாக்கியிருந்தனவா? மொழி விவகாரம், மாநில சுயாட்சி விவகாரம், சோஷலிச அடிப்படையிலான திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, வடக்கு – தெற்கு பாகுபாட்டு அணுகுமுறையில் எங்களுக்கு இருந்த விழிப்புணர்வு, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை எதிர்த்துத் துணிச்சலாக அறைகூவல் விடுக்கும் அணுகுமுறை இப்படி எவ்வளவோ விஷயங்கள் காரணமாக திமுக தொடர்ந்து குறிவைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் எங்களுடைய இயக்கத்தின் தொடக்கக் கால எதிரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். டெல்லியின் அதிகார மையத்தை மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதில் அக்காலகட்டத்தில் அவர்கள் மெல்ல மெல்ல வெற்றி கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும் வலுப்பெற்று வளர்ச்சி அடைந்தது. இது தாங்கிக்கொள்ள முடியாததாகப் பலருக்கும் இருந்தது. இந்த நிலையில்தான் திமுகவிலிருந்து நண்பர் எம்ஜிஆர் பிரிந்தார்.

திமுகவைப் பலவீனப்படுத்த எம்ஜிஆரை இந்திரா காந்தி பயன்படுத்திக் கொண்டாரா? என்று கேட்கப்படுகிறது. இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை.

அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார். எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?”

இவ்வாறு கருணாநிதி கூறியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருணாநிதியின் கருத்து குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கேட்டோம். “அவர், அதிமுக துவங்கப்பட்டதற்கு திமுகவில் இருந்த உட்கச்சி பூசல்தான் காரணம். இந்திராகாந்தி எந்த வகையிலும் காரணம் இல்லை. அதில் இந்தாகாந்தியை சம்பந்தப்படுத்துவதில் எந்தவித நியாயமும் இல்லை.” என்றார்.

” கடந்த ஏழாம் தேதி ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ திமுகவும், காங்கிரஸும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படுவோம் என்றார். இதே கருத்தை அதே மேடையில் வழிமொழிந்தார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். இந்த நிலையில், கருணாநிதியின் கருத்து அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.