ஆஸ்கர் விருது

டெல்லி: தமிழர் உள்பட இரு இந்தியர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வாழ் தமிழரான கொட்டலாங்கோ லியோன், மற்றொரு இந்தியரான ராகுல் சி. தக்கார் ஆகியோருக்கு தொழில்நுட்ப சாதனைக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  பிறகு, ஆறு வருடங்கள் கழித்து திரைத்துறை பிரிவில் உயரிய விருதான, ஆஸ்கர் விருதின் சான்றிதழை  தமிழர் ஒருவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கொட்டலங்கோ லியோன்?:
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட கொட்டாலங்கோ லியோனின் தந்தைக்கு சங்கரன் கோவில் சொந்த ஊர். கோயம்புத்தூரில் வளர்ந்த லியோன், தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அடிப்படையில் டெக்னிக்கல் இன்ஜினியரான லியோன், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் டிசைன் பிரிவில் உள்ளார். அத்துறை சார்ந்த பிரிவிலேயே லியோனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கொட்டலங்கோ லியோனுடன் பணிபுரிந்த சாம் ரிச்சர்ட்ஸ், ராபர்ட் ராய் ஆகியோருக்கும் ஆஸ்கர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையின் அனிமேஷன் பணியில் சிறந்து விளங்கிய இந்தியரான ராகுல் சி. தக்காருக்கும் ஆஸ்கர் தொழில்நுட்ப விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் பணிபுரிந்த ரிச்சர்டு சாங்குக்கும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.