vj

சென்னை:

த்திரிகையாளர்கள் என்ற போர்வையில் அதிமுகவினர் எனக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்ந்தால் ஜெயலலிதா வீட்டை நான் முற்றுகையிடுவேன்” என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்களை பார்த்து விஜயகாந்த் துப்பியதால்,  பத்திரிகையாளர் சங்கத்தினர் இன்று விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களை, தே.மு.தி.க.வின் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆன பார்த்தசாரதி தலைமையிலான தே.மு.தி.க வினர் தாக்கினார்கள். பார்த்தசாரதி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

விஜயகாந்த் அறிக்கை
விஜயகாந்த் அறிக்கை

இந்த நிலையில், தனது வீடு முற்றுகையிடப்பட்டது குறித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா.. அதைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஜெயா டிவியை சார்ந்தவர்களுடன் அதிமுகவினரும், சமூக விரோதிகளும் ஒன்று சேர்ந்து தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தை முற்றுகையிட வருவதும், எனது வீட்டை முற்றுகையிட வருவதும் நடக்கிறது. தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள்.

மேலும் தரக்குறைவான மற்றும் ஆபாச வார்த்தைகளாலும் கடுஞ்சொற்களாலும் கோஷமிட்டனர். காவல்துறையிடம் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் எனது இல்லத்திற்கு அருகிலேயேதான் காவல் நிலையமும் இருக்கிறது.

காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை தேமுதிகவின் தலைமை நிலைய செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ப. பார்த்தசாரதி மற்றும் வழக்கறிஞர்கள், மாவட்ட கழக செயலாளரக்ள், நிர்வாகிகள் பலரும் எனது வீட்டு் பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் மனு அளிக்க விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர். புகார் அளிக்க வந்தர்களில் வழக்கறிஞர்களை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

எனது வீடு மற்றும் கட்சி அலுவலகம் அருகாமையில் போராட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதித்தது… இது முழுக்க முழுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

சென்னையில் அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம், சேப்பாக்கம் மைதானம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் எனக்கு எதிரான போராட்டங்கள் மட்டும் எனது வீடு மற்றும் கட்சி அலுவலகம் அருகே நடத்துவதற்கு காவல்துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி கொடுத்தது.

அதிமுகவினர் நடத்திய போராட்டத்தை நிறுத்துவதாக சொல்லி அறிக்கை வெளியிட்டு நாடகமாடிய முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் அவர் சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடா. எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கடமை உணர்வும், கண்ணியமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இல்லையா.

இப்பிரச்சினையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறியதாகவே் தெரிகிறது. காவல்துறை போராட்டம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு் தேமுதிகவினரை வன்முறை செய்பவர்களாக தமிழக மக்களிடம் சித்தரிப்பதற்காகவே கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நான் கருதுகிறேன். முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் வீட்டின் அருகிலே இதுபோன்ற போராட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்குமா. மழை வெள்ள பாதிப்பால் இந்த ஸ்டிக்கர் அதிமுக அரசின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதை மறைப்பதற்காகவே முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற போராட்டங்கள் எனக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.

இந்த நிலை தொடருமானால் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் முன் நான் அறப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எனக்கு வேறு வழியேதும் தெரியவில்லை. எனவே இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில்  விஜயகாந்த். தெரிவித்துள்ளார்.