actor

 

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஜெயம்ரவி புகைப்படத்துடன் “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரையுலகின் நன்மை கருதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜெயம் ரவி அவர்களுக்கு நன்றி. தமிழ் திரைப்பட சங்கம் என்றும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும்” என்று வந்த விளம்பரம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தயாரிப்பாளர்களுக்கு அப்படி என்னதான் செய்தார் ஜெயம்ரவி.. என்று யோசித்து மூளை குழம்பியவர் அநேகர்.
விஷயம் இதுதான்.

தமிழ் திரைப்படங்களை விலை கொடுத்து வாங்காத சேனல்களை கண்டிக்கும் விதத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது தயாரிப்பாளர் சங்கம். ஜெயா மேக்ஸ், பொதிகை, தந்தி டி.வி தவிர வேறு எந்த டிவி கேமிராமேன்களையும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிப்பதில்லை என்பது அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று.

இது பற்றி கவலைப்படாமல், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஜெயம்ரவி. அதற்கு எல்லா சேனல்களை சேர்ந்த நிருபர் மற்றும் கேமிராமேன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த தயாரிப்பாளர் சங்கம், நாங்கள் குறிப்பிட்ட மூன்று சேனல்களை தவிர வேறு யாரையும் பிரஸ்மீட்டுக்கு அனுமதிக்கக் கூடாது என்று கட் அண்ட் ரைட்டாக சொன்னது.
ஜெயம் ரவியோ, “இது படம் தொடர்பான ப்ரஸ்மீட் அல்ல. தனிப்பட்ட முறையில் நான் பத்திரிகையாளர்களை அழைத்திருக்கிறேன்” என்று சொல்லிப்பார்த்தார்.

.அவரது பேச்சை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, வருத்தத்தோடு பிரஸ்மீட்டையே கேன்சல் செய்துவிட்டார்.

இதனால் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு ஏக மகிழ்ச்சி. அதே நேரம் ஜெயம்ரவி மனம் வருத்தப்படக்கூடாதே என்று, அவரைப் பாராட்டி விளம்பரமும் கொடுத்திருக்கிறார்கள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது இதுதானோ?