201401301434190201401301434196_l
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மிகவும் ஆவேசமான மனநிலையில் இருக்கிறார்கள்.  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் பொது மக்கள் இன்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள், காளை உரிமை யாளர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் ஆகியோருடன் ஏராளமான  பொதுமக்களும் திரண்டு நிற்கிறார்கள்.
:”அனுமதி அனுமதி, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி!” என்று ஆவேசத்துடன் முழக்கமிடுகிறார்கள்.
அலங்காநல்லூர் உட்பட பல ஊர்களில் வீடுகளின் மேல் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல, வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் கடை அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.  அலங்காநல்லூரில் பதட்ட நிலை இருந்ததால், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் போக்கு வரத்து வசதி இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பாலமேட்டிலும் , தடை உத்திரவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. பாலமேடு பேருந்து நிலைய  பிரதான சாலையில்  பொதுமக்கள்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் கலைந்துபோகச் சொல்லியும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிறகு,  போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக  அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
போராட்டக்காரர்கள் விடாமல்,  பாலமேடு பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கணிசமான  பெண்களும் கலந்து கொண்டனர். இங்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
kalai_2696024f
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், விழா கமிட்டியினர் போராட்டத்தில் குதித்தனர். சாலையின் குறுக்கே தடுப்புகளை வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்  ஊர்வலமாக வாடிவாசலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர், ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மொட்டை போட்டுக் கொண்டு, தடைக்கு எதிராக கோசம் இட்டார்கள்.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி, ஊமச்சிக் குளம், காஞ்சரம்பேட்டை பகுதிகளிலும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.\
கிராமப்புற மக்கள் மட்டுமின்றி, நகரவாசிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே போல சமூகவலைதளங்களிலும் தங்களது குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார். உடனே பலரும், “முதலில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குங்கள். பிறகு வாழ்த்து சொல்லலாம்” என்கிற ரீதியில் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டார்கள்.
அலங்காநல்லூரில் இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ந்த நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தால்  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடாமல் கவனமாக  கண்காணிக்க வேண்டும் என்று டிஜிபி அசோக்குமார் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஒரு முக்கியமான விசயம்..
பல்வேறு அமைப்புகளும் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராட்டங்களை அறிவித்திருக்கின்றன. ஆனால்  தற்போது நடைபெறும் போராட்டங்கள், மக்கள் தன்னெழுச்சியாக நடத்துபவையே.
1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரிய அளவில் தமிழகம் முழுதும் பரவி நடந்தது. அதன் பிறகு, தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம்… ஈழப்படுகொலைகளை எதிர்த்து  முத்துகுமார் தீக்குளித்தபோது எழுந்தது.  முத்துகுமார் உடலை எடுத்துச் செல்லும் வழியெங்கும், எந்தவித அறிவிப்பும் செய்யப்படாமலேயே கையில் மெழுகுவர்த்திகளுடன் அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டார்கள்.  அதோடு, மாணவர்களும், பொதுமக்களும் கொந்தளிப்பில் இருந்தார்கள்.  திடுமென கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகள் மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இப்படி பலவித நடவடிக்கைகள் எடுத்து மக்களின் கொந்தளிப்பை தணியச் செய்தது அப்போதைய தி.மு.க. அரசு.
இப்போதும் அதே போல, தன்னெழுச்சியாக  போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள்.
வாடிவாசலில் காளைகள் சீறுமா இல்லையா என்பது தெரியவில்லை.. ஆனால் தமிழக மக்கள் திமிறி எழுந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது!
–  எம். கருணாமூர்த்தி