செந்தில் பாலாஜி நீக்கப்படவில்லை!  புரளியின் பின்னணி என்ன?

Must read

29-1438153166-senthil-balaji6767
சென்னை:
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக  நேற்று இரவில் இருந்து சமூக வலைதளங்களில்  பதிவிட்டுவருகிறார்கள் பல நெட்டிசன்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2011 ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றவர் செந்தில் பாலாஜி. செல்வாக்கு மிக்க அமைச்சராக, தொடர்ந்து 4 ஆண்டுகள் அதே துறை அமைச்சராக இருந்துவந்தார்.
மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜி பெரிய யாகம் செய்தார்
ஆனால் வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்றவுடன், கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி பாலாஜியின் பதவியை பறித்தார். அவர் வகித்துவந்த மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோனது.
இந்த அதிரடிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.
“கட்சியினரை புறக்கணித்துவிட்டு தனது குடும்பத்தினருக்கே முக்கியத்துவம் தருகிறார்.   அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வான கரூர் கே.சி. பழனிச்சாமியுடன் சில வியாபார தொடர்புகள் வைத்திருக்கிறார்.   ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்தை செந்தில் பாலாஜியின் தம்பி தனது ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கிறார்.  அவர் மீது பல வழக்குகளும் உள்ளன” என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன.
மெட்ரோ விவகாரம்:
செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது மெட்ரோ ரயில் விவகாரம்தான். மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரிடம்  செந்தில் பாலாஜி பலனடைந்ததாகவும், அந்தத் தகவல் முதல்வருக்குத் தெரிந்ததால் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
“ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் ஒருவரது அருட் கடாட்சம் பாலாஜிக்கு இருந்தது.  சசிகலாவுக்கும், அந்த உறவினருக்கும் மோதல் ஏற்பட…. தனது வெற்றியை நிரூபிக்கும் வகையில், பாலாஜியை நீக்கச் செய்தார் சசிகலா” என்றும் சொல்லப்பட்டது.
நீக்கத்துக்கு பிறகு, அ.தி.மு.கவினரின் வழக்கப்படி அமைதி காத்து வருகிறார் செந்தில் பாலாஜி.
இந்த நிலையில்தான் நேற்று இரவில் இருந்து, “கட்சியிலிருந்து பாலாஜி நீக்கப்பட்டார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்த போது, “அது பொய்யான தகவல். செந்தில் பாலாஜி நீக்கப்படவில்லை” என்றார்கள்.
செந்தில் பாலாஜி தரப்பினரோ, “சிலர் தவறான தகவல்களை அம்மாவிடம் கொடுத்து செந்தில் பாலாஜியை நீக்கவைத்தார்கள். ஆனால் செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்பதை இப்போது தெரிந்து கொண்டார். தவறு  என்றால் தண்டிப்பது போலவே, தவறில்லை என்றால் மன்னித்து ஏற்பதிலும் அம்மாவுக்கு இணை இல்லை. ஆகவே  வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜிக்கு மீண்டும் கட்சி பொறுப்பு அளிக்க  அம்மா  முடிவு செய்துள்ளார். இது பொறுக்காத சில உட்கட்சி விரோதிகள், செந்தில் பாலாஜி அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டதாக புரளி கிளப்பி விட்டார்கள்.  சமூகவலைதளங்களைப் பொறுத்தவரை,  ஒரு விசயம் உண்மையா இல்லையா என்பதை ஆராயாமல் பரப்பி விடுவார்கள். அதுபோத்தான் இப்போது நடந்துவருகிறது. விரைவில் செந்தில் பாலாஜி, முக்கிய பொறுப்புக்கு வருவார் பாருங்கள்” என்கிறார்கள்.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article