(பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு… முகநூல் பதிவு)
 
images
தலைப்பைப் பார்த்து மிரண்டு விடாதர்கள். அந்த தாதா நான்தான்!
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டு மற்றும் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு என கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் இந்த தாதா போஸ்டிங்கில் இருந்தேன். இத்தனைக்கும் எந்தப் பெண்ணையும் காதலித்தது கிடையாது.
காதல் கடலில் விழுந்த நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொடுக்கும் பணி செய்து கிடந்தேன்.
காதல் என்பது டெங்கு மாதிரி.. ஒருத்தனுக்கு வந்தால் சுத்தி இருக்கும் எல்லாருக்கும் வந்து தொலைக்கும்.
எவனோ ஒருத்தன், “டேய், நீதான் நல்லா எழுதுவியே (!) என் ஆளுக்கு கொடுக்க லவ் லெட்டர் எழுதித்தாடா” என்றான். எழுதுவது எனக்கு விருப்பம் என்பதால் ஒத்துக்கொண்டேன்.
அதன் பிறகு அது வே தொடர்ந்தது…
அந்தந்த ஃபிகர்களுக்கு ஏற்ப கடிதம் எழுதுவது எனது சிறப்பு(!)
தினமும் குங்குமம் திருநீறு வைத்து வரும் இந்து ஆன்மிகப் பெண்களுக்கு பிள்ளையார்சுழி போட்டு எழுதிக்கொடுப்பேன். கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் பெண்கள் கிட்டதட்ட அரை கிறிஸ்டியனாகவே ஆகியிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு சிலுவைக் குறி போட்டு கடிதம் ஆரம்பிப்பேன்.
“உடனே காதல் கவிதை வேணும்!” என்று அர்ஜெண்ட் படுபவர்களுக்கு, “உன்னில் என்னில் கண்ணில் விண்ணில்” இப்படி போட்டு ஏதாவது எழுதிக்கொடுப்பேன். பதிலுக்கு அங்கிருந்து வரும் கவிதைகள் இதைவிடக் கேவலமாக இருக்கும்!
ஆனால் குணா கமல் மாதிரி அங்கங்கே மானே, தேனே, பொன்மானே போடுவது மட்டும் என் பாணி அல்ல.. ஒரு காதல் கடிதம் மாதிரி அடுத்தது இருக்காது… ரொம்பவும் மெனக்கெடுவேன்.
அழகு பயித்திங்களுக்கு அவளின் கண், காது,மூக்கு, தொண்டை என ஈ.என்.டி. ஸ்பெசலிஸ்ட் மாதிரி கூர்ந்து கவனித்து, அப்புறம் வர்ணித்து எழுதுவேன், அழகுமுக்கியமில்லை என்கிற மாதிரி நடிக்கிறவளுக்கு “ஆத்மார்த்தம், இதயம், ஈர்ப்பு” இப்படி வார்த்தைகளைப் போட்டு எழுதிக்கொடுப்பேன்.
என் நண்பன் ஒருத்தன், ஒருத்தியிடம் தன் காதலைச்சொல்ல.. அவளோ, “இந்த வயசுல படிக்கணும். அப்புறம் வேலைக்குப் போகணும்.. அப்புறம்…” என்று லெக்சர் கொடுத்திருக்கிறாள்.
அவளுக்கு, ஃப்ரம், டூ எல்லாம் போட்டு,ல “பொருள்: தங்கள் இதயம் வேண்டி விண்ணப்பம்” என்று அப்ளிகேசன் மாதிரி எழுதிக்கொடுத்தேன். ஒர்க் அவுட் ஆனது.
இன்னொருத்தனது, ஹை லெவல் காதல். இங்கிலீஸ் மீடியம் படிக்கும் பெண்ணை லவ்வி விட்டான்!
நாமதான் இங்கிலீஸ்லயும் புலியாச்சே…
“டியர் ” …”
ஐயம் சஃபரிங் ஃப்ரம் லவ். ப்ளீஸ் கிவ் மீ யுவர் ஹார்ட் டு மை ஹோல் லைஃப்..” என்று ஆரம்பித்து இரண்டு பக்கங்களுக்கு எழுதிக்கொடுத்தேன். மிரண்டுவிட்டாள்.
கிட்டதட்ட இருபத்தைந்து நண்பர்களுக்காவது இப்படி விதவிதமாகக் காதல் கடிதம் எழுதிக்கொடுத்திருப்பேன்.
ஆச்சரியம் என்னவென்றால், என்னிடம் கடிதம் வாங்கிப்போன அத்தனை பேருக்கும் திருமணம் நடந்தது… வேறு பெண்களுடன்!!
(டி.வி.எஸ். சோமுவின் முகநூல் பதிவு)