13-1444717948-kamal-karuna34

 

மீபத்தில் கமல் தனது 61ம் பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சை வெளியிட்ட ஊடகங்கள் “கமல் ஆவேசம்” என்பதாகவே பெரும்பாலும் தலைப்பிட்டன. மாட்டுக்கறி குறி்த்தும், மதம் குறித்தும் அவரது பேசியது ஆவேசமாகத்தான் இருந்தது. அதோடு, “அரசியலுக்கு வரமாட்டேன்” என்று மீண்டும் வலியுறுத்திச் சொன்ன பேச்சும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இந்த பேச்சு முழுக்க, கருணாநிதிக்கு கமல் சொன்னதாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.

“நான் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும்.. என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமல் ஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன்.. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம்” என்ற கமல், “ பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை” என்று சொன்னதுதான் கருணாநிதிக்கான பேச்சு இது என்று கருத காரணமாகியிருக்கிறது.

கமலை(யும்) இழுக்க பா.ஜ.க. முயன்றது உண்மை. அதற்காகத்தான் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்காக மாநிலவாரியாக விளம்பரதூதுவர் நியமிக்கப்பட்டபோது தமிழக சார்பில் கமல் நியமிக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு அப்போதே கமல் தனது செய்கையால் பதில் சொல்லிவிட்டார்.

நாடு முழுதும் நியமிக்கப்பட்ட “தூய்மை இந்தியா தூதுவர்கள்” தூதுவர்கள் டில்லிக்கு அழைக்கப்பட்டனர். குடியரசு தலைவர் பிரணாப்பை அவர்கள் சந்தித்தார்கள். பிறகு அவரவர் தங்கள் பணியை பார்க்க கிளம்பிவிட்டார்கள். கமல் கிளம்பியது, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க! பா.ஜ.கவுக்கு நேர் எதிர் முகாமல் இருக்கும் கெஜ்ரிவாலை சந்தித்து உரையாடிவிட்டுத்தான் தமிழகம் திரும்பினார் கமல்.

காங்கிரஸ் தரப்பிலும் சிலர், கமலிடம் பேசிய வரலாறு உண்டு. ஆனால் அதற்கும் தனது பாணியில் பதில் சொன்னார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் விளம்பரத்தூதராக கமல் நியமிக்கப்பட்டார். அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரத்தூதுவராக. அப்போது கமல், பணத்திற்கு வாக்களிக்காதீர்கள்…சுயமரியாதையை விற்காதீர்கள்…சிந்தித்து வாக்களியுங்கள் என்று விளம்பரப் படத்தில் தோன்றி, கேட்டுக்கொண்டார். (வேட்டி கட்டிய தமிழன் என்று ப.சிதம்பரம் விழாவில் கமல் பேசிய காலகட்டம் அது என்பது குறிப்பிடத்தக்கது.)

அதில் கவனிக்க வேண்டிய இரு விசயங்கள் உண்டு. ஒன்று.. அந்த விளம்பரப்படத்தில் நடிக்க கமல் ஏதும் ஊதியம் பெறவில்லை. இரண்டு… தேர்தல் ஆணைய விளம்பரங்களில் நடிப்பவர்கள் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதி. இதை உணர்ந்தே, அந்த விளம்பரத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார்.

இன்னொரு விசயம். வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரத்தில் மட்டும் வலியுறுத்துபவர் அல்ல அவர். தானும் வாக்களிப்பதை கடமையாக கருதுபவர். ஆனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு தன்னை இழுக்கும் கட்சிகளிடமிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட சம்பவமும் ஒருமுறை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா, எவரையும் மதிக்கமாட்டார். குறிப்பாக நடிகர்களை! அவரது தீவிர ஆதரவாளராக வெளிக்காட்டிக்கொள்ளும் சரத்குமார் படும்பாடு அனைவருக்கும் தெரியும். சட்டசபையிலேயே சரத்குமாரை குற்றம்சாட்டினார் ஜெயலலிதா.

தவிர, “வேட்டி கட்டிய தமிழன் ஒருவர் பிரதமராக வேண்டும்” என்று கமல் சொல்ல.. “பிரதமரை தேர்ந்தெடுப்பது கமல் அல்ல” என்று காட்டமாகச் சொன்னார் ஜெயலலிதா.

ஆக பாஜக, காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை அரசியலுக்கு கமலை இழுக்கவில்லை.

பிறகு தனது பிறந்தநாள் பேச்சில் “என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும்” என்று கமல் சொன்னாரே.. அவர் குறிப்பிட்டது யாரை?

”கருணாநிதியைத்தான்” என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

அந்த “விஸ்வரூப” நிகச்சியை சற்று ரீவைண்ட் செய்து பார்த்தால், இது புரியும்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமச்சருமான, ப.சிதம்பரம் குறித்து “ப.சிதம்பரம் – ஒரு பார்வை” என்ற நூல் வெளியீட்டு விழாவில்தான் விஸ்பவரூப வில்லங்கம் ஆரம்பித்தது.

அந்த விழாவில் கலந்துகொண்ட கமல், ”வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும்” என்று அவர் பேசினார்.

“தமிழர் பிரதமராக வேண்டும்” என்றதோடு தனது தமிழார்வத்தை நிறுத்தியிருக்கலாம் கமல். ஆனால் வழக்கம்போல வித்தியாசமாக பேச வேண்டும் என்பதால், வேட்டியை இழுத்தார். அது அவரை சிக்கலில் தள்ளிவிட்டது.

கமலின் பேச்சு குறித்து, “நன்றாக கவனியுங்கள். வேட்டிய கட்டிய தமிழன்தான் பிரதமராக வேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். சேலை கட்டியவரை அல்ல” என்று தனது நகைச்சுவை + வில்லங்க பேச்சை எடுத்துவிட்டார் கருணாநிதி.

அந்த நேரத்தில் பிரதமர் கனவுடன் இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அப்போதுதான் கமல் மீது கடும் கோபம் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது.

அடுத்து வந்த கமலின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, “அப்படம் வெளியாகும் அத்தனை தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வாய்ப்பில்லை” என்றது ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு. (ஜெயா டிவிக்கு படத்தின் சாடிலைட் உரிமைய தராததாலும் கோபம் என்றும் சொல்லப்பட்டது.)

அப்போது தனது அடுத்த குண்டை வீசினார் கருணாநிதி. “வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என கமல் பேசியதால்தான் அவரது விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை ஏற்படுத்துகிறார் ஜெயலலிதா” என்றார்.

கருணாநிதியின் இந்த ஸ்டேட்மெண்ட்டால், ஜெயலலிதாவைவிட அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார் கமல். “இப்படிப்பேசினால், படத்துக்கு இன்னமும் ஆபத்து நேரும்” என்பதை அறியாதவரா அவர்?

பிறகு படம் வெளியாவது தள்ளிப்போக, தான் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவதாக கமல் சொல்லிப்புலம்ப… இதெல்லாம் யாரும் மறக்கமுடியாது.

ஆனால் பலரும் மறந்த அப்போதைய விசயம் ஒன்று உண்டு. அது, “விக்ரம் படம் வெளியான சமயத்திலேயே கமல் குறித்து கடுமையாக விமர்ச்சித்து எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா” என்று தனது அடுத்த வெடியை திரிகொளுத்திப்போட்டார் கருணாநிதி.

வெகுண்ட ஜெயலலிதா, “அப்படி ஒரு கடிதமே நான் எழுதவில்லை. பொய் சொன்ன கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளேன்” என்றார் ஜெயலலிதா.

ஆனாலும். ஜெயலலிதா கடிதம் எழுதியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

அதாவது தனக்கும் ஜெயலலிதாவுக்குமான அதிகாரப்போட்டியில் யாரையும் இழுக்க, பலியாக்க கருணாநிதி தயங்கியதே இல்லை அந்த பலியாடுகளில் ஒருவராக ஆகிப்போனர் கமல்.

ஆனாலும், கருணாநிதி மீதான தனது ஆதங்கத்தை கமல் வெளிப்படுத்தியதே இல்லை. தனது தமிழ் ஆர்வத்துக்கு காரணமாக கருணாநிதியைத்தான் சொல்லி வந்தார். கருணாநிதியை திரையுலகினர் வாழ்த்தும் ஒரு நிகழ்ச்சியில் (2012) கலந்துகொண்ட கமல், “அவரை வாழ்த்த எனக்கு தகுதி இருக்கிறதா” என்கிற அளவுக்கு கருணாநிதியை உயர்த்தித்தான் பேசினார்.

எதிர்க்கட்சி வரிசையில் கருணாநிதி இருக்கும்போது கூட, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்க கமல் தயங்கியதே இல்லை. கடந்த மாதம் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் புத்தகத்தை கருணாநிதி வெளியிட கமல் பெற்றார். அப்போதுகூட, “நான் வரும்போது கூட்டத்தினர் தலைவா என்று அழைத்தார்கள். அந்த வார்த்தை அவருக்குத்தான் சொந்தம்” என்று கருணாநிதியை சுட்டிக்காட்டினார்.

“கருணாநிதியின் வசனத்தைச் சொல்லித்தான் நடிகன் ஆனேன். இன்று அவரோடு மேடையைப் பகிர்ந்துகொண்டு இருப்பது என்னுடைய பாக்கியம்.” என்றார் வழக்கம்போலவே.

ஆனால் அந்த விழாவில்தான், கமலை ஆத்திரப்படவைத்த சம்பவம் நடந்தாதகச் சொல்கிறார்கள். அதாவது, வரும் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி நேரடியாக கேட்டதாகவும், அதிர்ந்துபோன கமல் மறுத்ததாகவும் தகவல். தவிர கமலுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலமும், தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படதாகவும் சொல்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. பெற்ற பெரும் வெற்றி, மக்கள் கூட்டியக்கம் தணி அணியாக செயல்படுவது, பா.ம.க.வும் தே.மு.திகவும் தனி ஆவர்த்தனம் செய்வது போன்றவற்றால் தி.மு.கவுக்கு பலம் சேர்க்க எதுவும் செய்ய தயாராக இருக்கிறார் கருணாநிதி. ஆகவேதான் இத்தனை திட்டங்கள் என்கிறார்கள்.

விஸ்வருப விவகாரத்தில் கருணாநிதி ஆடிய வில்லங்க விளையாட்டை கமல் மறக்கவில்லை. ஆகவேதான் இனியும் சும்மா இருந்தால் நல்லதில்லை என்கிற முடிவுக்கு வந்தாராம். “நமக்குத் தெரியாமலேயே நம்மளை அரசியல் புதைகுழியில் தள்ளிவிட்டுவாங்க போலிருக்கே” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்ட கமல், தனது பிறந்தநாள் விழாவில் வெளிப்படையாக பேசிவிட முடிவெடுத்தார்.

எப்போதும்போல, “அரசியலுக்கு வரமாட்டேன்” என்று சிம்ப்பிளாக சொல்லிவிட்டு, பகுத்தறிவு கருத்துக்களை பேசும் கமல், அரசியல் குறித்த தனது பார்வையை வெளிப்படையாக அறிவித்தார்.

“நான் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும்” என்றார் காட்டமாக.

அதோடு, “என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும்” என்றும் கூறினார். தவிர, “ கமல் ஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன்” என்று எச்சரிக்கவும் செய்தார்.

மேலும், “அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம்” என்றவர்,” “பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை” என்று பட்டென்று சொன்னார்.

பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகவியவை “பகுத்தறிவு” வார்த்தையை பயன்படுத்துவதில்லை. மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டாலும், குடும்பத்தினர் கோயில் கோயிலாக வழிபாடு செய்தாலும் இன்னும், “பகுத்தறிவு” என்ற வார்த்தைக்கு பேடணனட் உரிமை வைத்திருப்பவர் கருணாநிதிதான். ஆகவேதான் அந்த வார்த்தையை குறிப்பிட்டு அழுத்தம் கொடுத்துச் சொன்னார் கமல் என்கிறார்கள்.

பலருக்கும் தெரியாத… அல்லது மறந்த விசயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே.. கமலை அரசியலுக்கு அழைத்தார் என்றும், கமல் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

இன்றளவும் வாக்களிப்பது மட்டுமே தனது கடமை என்று நினைக்கிறார் கமல்.

அவரது அரசியல் பார்வையை இப்படிச் சொல்லலாம். இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சில் ஒருமுறை, “ஐ லவ் இங்லேண்ட்.. ஐ ஹேட் இங்கிலீஷ் மென்” என்றார். அதாவது, “நான் இங்கிலாந்து நாட்டை நேசிக்கிறேன். ஆனால் இங்கிலாந்து மக்களை வெறுக்கிறேன்” என்று அர்த்தம்.

அதே போல கமலும், இந்த தேர்தல் அரசியலை ஆதரிக்கிறார். வாக்களிக்கிறார். ஆனால் அரசியல்வாதிகளை வெறுக்கிறார். ஒதுங்கியிருக்க விரும்புகிறார்.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் “எனக்கு நினைவு தெரிந்த முதல், நான் நடித்துக் கொண்டு இருப்பது சினிமாவில் மட்டுமே” என்றார். அதோடு, “சினிமாவில்கூட நான் அரசியல் செய்ததில்லை!” என்றார்.

ஆனால் இன்னொரு விசயமும் பரபரப்பாக பேசப்படுகிறது.  தி.மு.க. ஆதரவு பிரமுகர்கள் கமலை வைத்து படம் எடுக்கவும் தொடர்புகொண்டதாக சொல்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் படம் வெளியாகும்போது, ஆளுங்கட்சி குடைச்சல் கொடுத்தால், அதை வைத்தை கமலை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது திட்டமாம். “விஸ்வரூபத்தில் தப்பிவிட்டார். இதில் சிக்கவைத்துவிடலாம்” என்பதே அவர்களது திட்டமாம்.

கமல் தரப்பினர் சொல்வது இதுதான்: “கலைத்துறையில் தீரா தாகம் கொண்ட அவரை, விடாது கறுப்பாய் ஏன் துரத்துகிறீர்கள்? அவரை விட்டு விடுங்களேன்!”

விடுமா கறுப்பு?

அ.விசுவநாதன்