மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியுடன் பழகிய மூத்தபத்திரிகையாளர் வி.கே. சுந்தர்  அவர்களின் முகநூல் பதிவு:
கலாபவன் மணி
கலாபவன் மணி
“கலாபவன் மணி இறந்துவிட்டதாக தகவல்’ யாராவது விசாரித்து உறுதி படுத்த முடியுமா என எப்போதும்போல் பத்திரிகை நண்பர்கள் வாட்ஸ் அப்பில் நேற்றிரவு பதிவுபோட்டுப் ‘பரபர’த்துக் கொண்டிருந்தார்கள்! சமூக வலைத்தளங்களில் இதுபோல் எவ்வளவோ வந்திருக்கிறது.
சமீபத்தில்கூட நடிகர் ஆனந்தராஜ் பற்றி செய்தி வந்து சில நிமிடங்களிலேயே தான் நலமுடன் இருப்பதாக மறுப்பு அறிக்கை கொடுத்திருந்தார்.அதுபோலவே சேட்டனும் ‘எனிக்கு இந்னடா கொறவு’ என செய்தி அனுப்புவார் என்று உறுதியாக நம்பினேன்.இறுதிவரை வரவே இல்லை.
அவரை எவ்வளவோ திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன், பிரம்மித்திருக்கிறேன்.அற்புதமான மனிதன் என்பதை அவருடன் பழகிய சில நாட்கள் எனக்கு உணர்த்தியது.
எனது நண்பர் எஸ்.என்.ராஜா தயாரிப்பில் ‘சரித்திரம்’ என்றொரு படம்.அண்ணன் ராஜ்கிரண்,ஆதி,கலாபவன் மணி,சண்முகராஜா நடிப்பில் உருவாகி முக்கால்வாசி முடிந்த நிலையில் சூழல் காரணமாக அந்தப் படம் அப்படியே முடங்கிவிட்டது என்பது துயரம்.
அந்தப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றுக்கொன்டிந்த நேரம்…நானும் ஜி.முத்துராமலிங்கன் அண்ணனும் சிலநாட்கள் அங்கிருந்தோம்.
படப்பிடிப்பு இடைவெளியில் கேரவேனில் கலாபவன் மணியுடனான எங்கள் சந்திப்பு நிகழும்.எனது வாழ்நாளில் அது மறக்கமுடியாத தருணம்! சீட்டுக் கச்சேரி,அரட்டைக் கச்சேரி என கேரவேனே குலுங்கும்.கிட்டத்தட்ட உலகநாடுகள் அத்தைனைக்கும் போய்வந்த மிமிக்கிரி கலைஞன்.
ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர்.மிக வறுமையான குடும்பம்.அப்பாவுக்கு உதவும் பொருட்டு ஆரம்ப நாட்களில் ஆட்டோ ஓட்டியவர்.அவரது ஆட்டோவின் பதிவு எண் 100.அதன்பிறகு சினிமாவில் வாய்ப்புகிடைத்து பன்முகத்தன்மை கொண்ட கலைஞனாக உயர்ந்த பிறகும் அவர் பழசையும் நட்பையும் ஒருபோதும் மறந்ததில்லை என்பதை அறிந்தபோது சேட்டன் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டான்.
வீ.கே. சுந்தர்
வீ.கே. சுந்தர்
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் ஆட்டோ ட்ரைவராக இருந்த ஸ்டாண்ட் நண்பர்கள் அத்தனை பேரையும் இவர் வீட்டில் பார்க்கலாம்! அவரது மானேஜராக இருக்கும் ஜோயி ஒரு காலத்தில் இவரோடு ஆட்டோ ஒட்டிய நண்பர்தான்.
சேட்டனுக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு கனவு உண்டு.அது தன் அப்பா வேலைபார்த்த உழைத்த அந்த நிலத்தை வாங்க வேண்டும் என்பது!கடின உழைப்பால் அதுவும் சாத்தியமாகியிருக்கிறது.அப்போதும் அவர் பழசையும் நட்பையும் மறக்கவில்லை!அவர் ஒட்டிய ஆட்டோ இன்னும் அவர் வீட்டில் பத்திரமாக இருக்கிறது.

வாழ்க்கையில் எவ்வளவோ பணம்..விதவிதமான பாரின் கார்கள் வாங்கியிருக்கிறார்.எல்லா வண்டிகளுக்கும் பதிவு எண் 100தான் என்றாலும் அவருக்கு ஸ்பெஷல் அந்த ஆட்டோ மட்டும்தான்.அதில் ரவுண்டடிக்கும்போது அப்படியொரு ஆனந்தம்.

சமீப காலங்களில் சனி,ஞாயிறு இரண்டுநாள் கட்டாயம் நண்பர்களோடுதான் இருப்பாராம். சாவரி போகாமல் நண்பனைப் பார்க்க வந்துவிட்டால் அவர்கள் குடும்பத்தில் கேட்க மாட்டார்களா!? இரண்டுநாள் வசூல் என்ன வருமோ அதைப் போகும்போது பல மடங்காகக் கொடுத்து அனுப்புவாராம் ‘மணி’தன்! சேட்டன் பற்றிச் சொல்ல இப்படி எவ்வளவோ இருக்கு…
இறுதியாக ஒன்று மட்டும்-சரித்திரம் படப்பிடிப்பு முடிந்து ஷெட்யூல் பேக்கப்.சேட்டனின் மேனேஜர் ஜோயி வந்து யூனிட்டில் மொத்தம் எந்தனைபேர் என்று கேட்டார்..தகவல் சொல்லப்பட்டது.
மாலையில் அத்தனைபேருக்கும் ஆளுக்கு ஒரு குவாட்டர் பாட்டில் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து தமிழையும் மலையாளத்தையும் அன்பில் குலைத்து ‘நன்றி மக்களே…சந்தோஷமா இருக்கணும் ‘ என்று சொல்லி எல்லோருக்கும் கொடுத்தாய்… நாமும் ‘ச்சீயர்ஸ்’ சொல்லிக்கொண்டோம்.
‘ச்சீயர்ஸ்’ என்றால் ‘மகிழ்ச்சி’ என்றுதானே அர்த்தம்? அதை நீயே பறித்துகொண்டாயே ….நியாமா சேட்டா!?”