உடுமலையில் பரபரப்பு: வேட்பாளரை மாற்றக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்

Must read

kal1
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி தி.மு.க. வேட்பாளராக பொள்ளாச்சியை சேர்ந்த மு.க.முத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரி கண்ணப்பனின் மகன் ஆவார். கோவை மாவட்டத்தை சேர்ந்த மு.க.முத்து உடுமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை பெதப்பம்பட்டி நால்ரோட்டில் குடிமங்கலம் ஒன்றியம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
குடிமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:– உடுமலை தொகுதிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத மு.க.முத்துவை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இவர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, கட்சியினருக்கும் அறிமுகம் இல்லாதவர்.
தொகுதியில் கட்சி சார்பில் நடந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றதில்லை. உடுமலை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் வேட்பாளர் அறிவிப்பில் நடந்த குளறுபடியால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை பரிசீலிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தி.மு.க.வினரின் போராட்டம் காரணமாக நால்ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More articles

Latest article