ஈழத்தமிழர் போராடியே உரிமை பெற முடியும்! : முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

Must read

15-1431671296-erik-solheim-srilanka

லண்டன்:

லங்கை 2009ம் ஆண்டு நடநத இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்து  இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நூலை, இலங்கைக்கான நார்வே சமாதான தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கீசன் ஆகியோரின் உதவியுடன் மார்க் சோல்டர் என்ற ஆய்வாளர் எழுதியிருக்கிறார்.

இந்தநூல் வெளியீட்டு விழாவில் பேசிய  எரிக் சொல்ஹெய்ம், “2009ஆம் ஆண்டு நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, அமெரிக்கா, நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. இதன் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சரணடைய செய்ய விரும்பினோம்.

அப்படி சரணடையும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றி வருவதற்கு ஒரு கப்பலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் நிராகரித்துவிட்டார்கள்.

இதனால்தான் வெள்ளைக்கொடியுடன் சரணடைய விடுதலைப் புலிகளின் தளபதிகள் முன்வந்த போது புலித் தலைவர்கள் பலரும் உயிரிழக்க நேர்ந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் அளிக்கமாட்டார்கள். இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொண்டுதான்  தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.” என்று எரிக் சொல்ஹெய்ம் பேசினார்.

More articles

Latest article