"இறுதிச்சுற்று" மாதவன் - பிஷப் மாறன்
“இறுதிச்சுற்று” மாதவன் – பிஷப் மாறன்

மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  அந்தப்படத்தில், கிறிஸ்துவ மதத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கிவிட்டு படத்தின் இயக்குநர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகுவோம்,  மக்கள் திரள் போராட்டங்களையும் நடத்துவோம்  என்றும்  தெரிவித்திருக்கிறார்  பிஷப். பால் ஆர்.டி. மாறன்.
இவர், இந்திய தேசிய அப்போஸ்தல பேராயத்தின் தேசிய பேராயராகவும்  நல்லிணக்க மாமனிதர்கள் இயக்கம் என்ற அமைப்பின் அமைப்பாளராகவும் இருக்கிறார்.
அவரிடம் பேசியபோது பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர்:
“இந்திய விளையாட்டுத்துறையில் நடக்கும்  உள் விவகாரங்கள்  பற்றி சிறப்பாகச் சொல்கிறது “இறுதிச் சுற்று” திரைப்படம். அந்தப் பட குழுவினருக்கும், இயக்குநர் சுதா அவர்களுக்கும் வாழ்த்துகள்.
அதே நேரம், கிறித்துவ மதத்தை இழிவு படுத்தும்படியாக சில காட்சிகள் படத்தில் இருக்கின்றன.
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.
மீனவ கிராமத்து வீட்டில், நாயகி இருக்கிறாள். அங்கு போதையில் வரும் அவளது தகப்பனார், “இனி நான் சாமிக்கண்ணு  கிடாயாது.. . சாமுவேல்’ என்கிறார் உளறலாக.
உடனே அவரது மனைவி, மகள் எல்லோரும் சேர்ந்து ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்று  அவரை துடைப்பத்தால் அடிக்கிறார்கள்.
இந்த காட்சி, மதம் மாறுகிறவர்களை… குறிப்பாக கிறிஸ்துவராக மாறுகிறவர்களை கொச்சைப்படுத்துகிறது.
அதாவது பணத்தாசை காண்பித்து, கிறிஸ்துவர்களாக மதம் மாற்றுகிறார்கள் என்பதைப்போல இந்தக்காட்சி இருக்கிறது.
மதமாற்றம் என்பது மனமாற்றமாக இருக்கவேண்டும் என்றே பைபிள் சொல்கிறது. இதை கொச்சைப்படுத்துவது என்ன நியாயம்?
குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது இந்த காட்சி. இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றச் செயல்.
படத்தின் கதைக்கு தொடர்பே இல்லாத இந்த காட்சிகளை வைத்திருப்பதன் மூலம் வேண்டுமென்றே திட்டமிட்டு  கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக காட்சிகளை எடுத்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. தவிர, இந்த தேவையற்ற காட்சியைத்தான் தொலைக்காட்சியிலும் விளம்பரமாக ஒளிபரப்புகிறார்கள்.  இதிலிருந்தே இவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.
உடனடியாக அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.  அதோடு,  தொலைக்காட்சி விளம்பரத்தில் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும். மேலும் படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். படத்தை தடை செய்ய வேண்டி போராட்டங்கள் நடத்த நேரிடும். அது மட்டுமல்ல.. படத்தை தடை செய்யக்கோரி, நீதிமன்றத்தையும் நாடுவோம்!” என்றார் ஆதங்கக் குரலில்.
கொஞ்ச நாட்களாக  இல்லாத,  திரைப்படங்களுக்கு எதிரான முழக்கங்கள்  மீண்டும் ஆரம்பித்துவிட்டதோ?
 
– டி.வி.எஸ். சோமு