ம.தி.மு.க.வில் இருந்து தொடர்ந்து பல நிர்வாகிகள் தி.மு.க.வில்  இணைவது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் சில கேள்விகளை சாமானியனின் பார்வையில் வைக்கிறார் கட்டுரையாளர்.
k v

 

தி.மு.க.வுக்கு… 

1. வைகோவிடமிருந்த ஆட்களைத் ஓடி ஓடி இழுக்கிறது தி.மு.க. அப்படியானால் ஏற்கனவே        ‘வைகோவின் கட்சி அழிந்துவிட்டது’ என்று கடந்தகாலத்தில் சொன்னதெல்லாம் கனவு புலம்பலா?

 1. வைகோவின் அரசியல் ஆதாரமாக இருந்தப் பலரையும் முந்தைய காலத்தில் தி.மு.க அழைத்து வந்தது. அவர்களை அங்கீகரித்து சரியான இடத்தில் வைத்திருக்கிறதா.?
 2. வைகோவிடமிருந்த முக்கியமான ஆட்களை எல்லாம் ஏற்கனவே பிரித்து முடித்தாகிவிட்டது. பெரும் புள்ளிகளாக இருந்தவர்களை எல்லாம் இழுத்தாகி விட்டது. வைகோவால் அறிமுகமானவர்கள்தான் இன்றைய தலைகள், தண்ணீர்கண்ட இடத்தில் கொக்குகள் தரையிறங்குவதுபோல இவர்கள் நாளை வேறுபக்கம் பறந்து போகமாட்டார்ள் என்பதில் என்ன நிச்சயம்.?
 3. பாலவாக்கம் சோமுவையும், மாசிலாமணியையும் வைத்துக்கொண்டு தி.மு.கவுக்கு என்ன லாபம். இவர்கள் வைகோவால் மட்டுமே வெளித்தெரிந்தவர்கள். தனிப்பட்ட ஆற்றலாளர்களும் கிடையாது. இவர்களை திமுகவில் இணைப்பதால், “ சோமு வந்துவிட்டார், மாசிலாமணி வந்துவிட்டார்” என்று தமிழகமக்களிடம் பெரிய பிரளயமா வரப்போகிறது?
 4. இவர்களனைவரும் தங்களது சுயநலத்துக்காக உங்கள் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கைச் செய்திக்காக அவர்களைச் சேர்த்துக்கொள்வதுதான் அறுபதாண்டுகால திராவிட அரசியலா? இது ஒரு கேவலமான நடவடிக்கை இல்லையா? இந்த பேடித்தனத்தை விட்டுவிட்டு, திமுக ஒரு மாவட்டத்தில் பலகுழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் பகைமை காட்டி பல குழுக்களாக பிரிந்து கிடக்கின்றதே அதைச் சரிசெய்யமுடியாமல் இவர்களை அழைத்து என்ன சாதிக்கப்போகிறீர்கள். வலுவான கூட்டணியும் உங்களால் அமைக்க முடியவில்லை. பிறகெப்படி 2016?
 5. அதிமுக்கிய கேள்வி. கலைஞரின் சொந்த மகனை, தென்மாவட்டத்தில் கட்சியை ஓடி ஓடி வளர்த்தெடுத்த மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் இணைக்க துப்பு இல்லாமல், மேலும் விலக்கி ஒதுக்கி வைக்கப்பட்ட தி.மு.க பிரமுகர்களை இணைக்க வழி தெரியாமல் இருந்துகொண்டு ஒன்றுக்கும் உதவாத ம.தி.மு.க நபர்களை ‘இணைத்துவிட்டோம்’ என்று பரபரப்பாகி மயங்கிக்கிடப்பது ஒரு போதையா?
 6. தி.மு.க., நிர்வாகிகளைவிட, இந்த ம.தி.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடு சூப்பரோ சூப்பர் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது உங்கள் கட்சி நிர்வாகிகளைவிடவும் இந்த ம.தி.மு.க நிர்வாகிகளைதான் மக்கள் நம்புகிறார்கள் என எடுத்துக்கொள்ளலாமா

ம.தி.மு.க.வுக்கு…

 

 1. வைகோ அவர்கள் திமுகவிலிருந்து தூக்கியெறிந்தபோது அவரை உள்ளங்கையில் தாங்கிபிடித்த அத்தனை பேரையும் பிறகு அவரே விரட்டியடித்துவிட்ட பிறகு எப்படி அவர் தமிழக அரசியலில் முக்கிய இடத்தையோ, முதல்பதவியையோ பெறமுடியும்?
 2. மதிமுகவின் இயங்குசக்தியாக இயங்கி, தி.மு.க.வில் சம்பாதித்த பெயரையும் பணத்தையும் இழந்த அத்தனைபேரையும் வைகோவை புறக்கணித்து வெளியேற்றினாரே அந்த நன்றியற்ற நிலைக்காகத் தான் இயற்கை அவரை இன்று இப்படி தண்டித்திருக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா?

3) இன்று ஓடுபவர்கள் எல்லாம் பதவிக்காதான் ஓடுகிறார்கள் என்றால், எல்.கணேசன், பொன்.முத்துராமலிங்கம், மதுராந்தகம் ஆறுமுகம், கோவை கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், வேதாரண்யம் மீனாட்சி சுந்தரம், திருச்சி.செல்வராஜ், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், டி.ஏ.கே.இலக்குமணன், சபாபதிமோகன், விஜயா தாயன்பன், மதுரை.செ.ராமச்சந்திரன், மறைந்த போடி முத்து மனோகரன், தங்கவேலு, கே.சி.பழனிச்சாமி போன்ற வைகோவுக்கு உதிரமாக இருந்த பலரும் அதற்காகதான் ஓடினார்களா? அன்று ஓடிய இவர்களை எல்லாம் பின்னாளில் தி.மு.க. எப்படி நடத்தியது ஓதுக்கியது என்பது வேறு கதை. சாதாரணமாக தூக்கி எறிந்ததன் விளைவால் தான் இம்மாதிரி தண்டனைகளையும் அவமானங்களையும் சந்திக்கின்றார் என்பது சரியா?

 1. உலகத்தில் தன்கட்சியை தானே சூரையாடிய ஓரே தலைவன் யார் என்றால் வைகோதான் என்று கல்கி எழுதிய வார்த்தைகள் இன்றைக்கு நிதர்சனமாகிவிட்டதே? நம்பி வந்த தகுதியானவர்களை எல்லாம் விரட்டியடித்துவிட்டு பாத்திரமறியாமல் தகுதியற்றவர்களுக்கெல்லாம் பெரிய பொறுப்புகளைக் கொடுத்து பக்கத்தில் நிறுத்தி பொம்மலாட்டம் காட்டிய பிரதிபலன்தான் இன்று வைகோ முதுகில் குத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பது சரியா?
 2. செய்நன்றி கொன்றவருக்கு இன்று செய்நன்றியே தண்டனையாகியிருக்கிறது. தன் அரசியல்கள் தெரிந்தவர்கள் யாரையும் தன்னோடு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தெளிவான முடிவோடு பயணித்ததன் விளைவுதான் வைகோவுக்கு இந்த நிலை என்பது சரியா.

பொதுவாக..

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்கும் அரசியலில் ஆயிரம் கசப்புகள் இருக்கலாம். ஆனால் பொது எதிரி என வந்துவிட்டால் ஒன்றாக நிற்க வேண்டும். நாம் எல்லாம் திராவிட கட்சிகள். நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். தேர்தலில் போட்டி வைத்துக்கொள்ளலாம். ஆனால் பொது எதிரியை விட்டுவைக்ககூடாது. சேர்ந்து எதிர்க்க வேண்டும். இன்று சிலபேர் தமிழ்தேசியம் என பேசிக்கொண்டு கிளம்பி வருகிறார்கள். திராவிடத்தை வீழ்த்த போகிறார்களாம். அவர்களை பொது எதிரியாக கருதி செயல்பட வேண்டும் என அறைகூவல் விட்ட வைகோதான் இப்போது பொது எதிரியாக நிற்கிறார்.

தமிழ்தேசிய பிள்ளைகளோ அல்லது உண்மையான பெரியாரின் பிள்ளைகளோ வைகோவை தோற்கடித்த முனைந்ததில்லை. இவர்கள் எல்லாம் வைகோவின் வெற்றிக்காகதான் உடனிருந்திருக்கிறார்கள். உண்மை இதுதான்.

ஆனால் அவரை ஒவ்வொரு முறையும் சபதமெடுத்து சத்தியம் செய்து தோற்கடித்தது அவர்சொன்ன இரண்டு திராவிடக் கட்சிகள்தான். யார் ஜெயித்தாலும் பரவாயில்லை. ஆனால் அந்த துரோகி வைகோ வெற்றிபெறக்கூடாது என்று சொல்லியடித்து தோற்கடித்தது தி.மு.க.தான். கலைஞர்தான். எனக்கு யார் வெற்றியை பற்றியும் கவலையில்லை. அந்த வைகோ மட்டும் வெற்றி பெறக்கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அந்த தொகுதி பொறுப்பாளர்கள் கார்டன் பக்கம் திரும்வேகூடாது என கர்ஜித்து தோற்கடித்தது ஜெயலலிதாதான். கடந்த 2011 தேர்தலின்போது ’சூரியன் தகித்தாலும் பரவாயில்லை. இலை கருகவேண்டும்’ என சபதமெடுத்து உள்வேலை செய்த வைகோவின் அதே பாணியைதான் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் அவருக்கு தொடர்ந்து செய்து வந்தது.

 •  பா.ஏகலைவன்