karuna dmk
ஆளுங்கட்சி விரித்திருக்கும் வஞ்சக வலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக அந்தச் சிலர் தம்மையும் குறைத்துக் கொண்டு, அரசியலின் தரத்தையும் குறைத்து வருவதை நீ நன்குணர்வாய்! என்று திமுக தலைவர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடித்தத்தில் மேலும், ‘’தமிழ்நாடு பதினைந்தாவது சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 22 அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனநாயக மரபுகளையொட்டி, கழகத்தின் சார்பில் விருப்ப மனு அளித்த அனைவருடனும் “நேர்காணல்” நிறைவுற்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்து, அவர்களுடைய கருத்துக்களைப் பெற்று, பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் வழங்கிய அறிவுரை, கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள், முதன்மைக் கழகச் செயலாளர் தம்பி துரைமுருகன் கூறிய கருத்துரை ஆகியவற்றின் அடிப்படையில் நான், “இந்தத் தேர்தலை ஒரு அறைகூவலாக ஏற்றுக் கொண்டு குறைந்த பட்சம் சிறிய மாவட்டங் களில் இரண்டு தொகுதி களிலும், பெரிய மாவட்டங்களில் மூன்று நான்கு தொகுதிகளிலாவது நீங்கள் வென்று காட்டு வீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்த எனது உள்ளக்கிடக்கையை நிறைவேற்றிக் காட்டிடும் நெஞ்சுரத்தோடு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருவாய் என்ற உறுதி எனக்கு நிரம்பவே இருக்கிறது.
நாம் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள ஜனநாயகப் பாதையில், இதுவரை கழகம் சந்திக்காத களங்கள் இல்லை; காணாத வெற்றிகள் இல்லை; பெறாத விழுப்புண்களும் இல்லை. கடந்த 25 ஆண்டுக் காலத் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 1989இல் தி.மு. கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 1991இல் அ.தி.மு.க., 1996இல் மீண்டும் தி.மு.க., 2001இல் அ.தி.மு.க., 2006இல் தி.மு.க., 2011இல் அ.தி.மு.க. என்று தொடர்ந்து மாற்றத்தை விரும்பும் மக்களின் கட்டளைக்கேற்ப, மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது. நிரூபணமாகி வரும் அந்த நிரலின்படி பார்த்தாலும்கூட, 2016 பொதுத் தேர்தலில் தி.மு. கழகம் தான் ஆட்சி அமைத்திடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று நடுநிலையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 2016 பொதுத் தேர்தலில் நாம் பெறப் போகும் வெற்றி, ஆகமொத்த தமிழக மக்களுக் குச் சொந்தமான மகத்தான வெற்றி.
திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள், ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது செய்த ஆற்றல்மிகு சாதனைகள், இன்றைக்குத் தமிழகத்தில் பட்டிதொட்டிகளில் எல்லாம் நினைவேட்டின் பதிவுகளாக நிலை பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு முறை கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும், மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உகந்த நலத் திட்டங்கள், நீண்ட கால சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு வழி அமைக்கும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள், கல்விச் சிறப்பு, விவசாய மேம்பாடு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று நிறைவேற்றப் பட்டுள்ளதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அதனால்தான் எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்தே ஆக வேண்டுமென்ற ஆர்வத்தில் மக்கள் அனைவரும் ஒருமுகமாகக் கழகத்திற்கு வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இடையே உள்ள உறவு இறுக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ள உறவு. இதை எந்த வீண் புரளிகளாலும், விதண்டா வாதங் களாலும், விஷமப் பிரச்சாரங்களாலும் புரட்டிப் போட்டு விட முடியாது. உறவின் அடிப்படையை மறுத்து அறுத்து விடவும் முடியாது. ஐந்தாண்டு காலம் அராஜக ஆட்சி நடத்தி, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து, ஜனநாயக மாண்புகளைச் சாக்காட்டுக்கு அனுப்பி, சட்டமன்ற மரபுகளை வெட்டிச் சாய்த்து, சர்வாதிகாரத் திற்குப் புதியதோர் ஆசனம் அமைத்துத் தந்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஒரே மாற்று என்பது தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட நிஜம் என்ற நிலையை யாராலும் அசைக்க முடியாது.
நாட்டில் நிலவும் நானாவிதச் சூழ்நிலைகளும் தமக்குச் சிறிதும் சாதகமாக இல்லை என்பதால்தான், ஆளுங்கட்சியினரே ஒரு சதித் திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கு நெஞ்சில் வஞ்சகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத சிலரைப் பிடித்து, “தி.மு.க. வும் அ.தி.மு.க.வும் மோசம்” என்று இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்து, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். அரசியல் துறை யிலும், ஊடகத் துறையிலும் உள்ள அந்த ஒரு சிலர், அ.தி.மு.க.வை ஏனோதானோவென மேலெழுந்த வாரியாக ஒப்புக்காகக் குறை சொல்வதும், தி.மு.க. வை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துச் சேற்றை வாரி இறைப்பதும் என்ற தீய வழியில் இறங்கி விட்டார்கள். மக்கள் நலனுக்கு எதுவுமே செய்யாத அ.தி.மு.க. ஆட்சியை – உருப்படியாக ஒரு திட்டத்தையும் நிறை வேற்றாத அ.தி.மு.க. ஆட்சியை – ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய இயலாத அ.தி.மு.க. ஆட்சியை – ஏற்கனவே இருக்கின்ற தொழிற்சாலை களை வரிசையாக மூடிய அ.தி.மு.க. ஆட்சியை – தொடர் மழைக்கும், அதனால் விளைந்த பெரு வெள்ளச் சூழலுக்கும் இடையே செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென்று திறந்து விட்டுச் செயற்கைப் பேரிடரை உருவாக்கி, சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களை அகதிகள் எனும் அவலத்திற்கு ஆளாக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் புரையோடிய புண்களை, போலிப் பட்டாடை போர்த்தி மறைத்து விட்டு, “தி.மு.கழகம் மோசம்” என்ற விஷமப் பிரச்சாரத்தில் அந்த ஒரு சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அ.தி.மு.க. வுக்கு, தி.மு.க. தான் ஒற்றை மாற்று என்று நிலைத்து விட்ட உண்மையை எப்படியாவது நீர்த்துப் போகச் செய்து விட வேண்டுமென்று ஆளுங்கட்சி விரித்திருக்கும் வஞ்சக வலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக அந்தச் சிலர் தம்மையும் குறைத்துக் கொண்டு, அரசியலின் தரத்தையும் குறைத்து வருவதை நீ நன்குணர்வாய்!
ஆட்சியில் இருந்து கொண்டு ஐந்தாண்டுகளும் அநியாயங்களைச் செய்து கொண்டிருப்பது அ.தி.மு.க. இந்த அராஜக ஆட்சியாளர்களை அகற்ற வேண்டு மென்று, அதற்கான தருணத்திற்காக ஆர்வத்தோடு காத்திருக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பேசிட முனைந் திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள், அ.தி.மு.க.வை அகற்றுவதில்தானே தீவிரம் காட்ட வேண்டும்? அதை விடுத்து, அ.தி.மு.க.வை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்திட துணிவோடும் உரிய வலிமையோடும் எதிர் நிற்கும் தி.மு.கழகத்தை இழித்தும் பழித்தும் பேச வேண்டிய அவசியமென்ன? அப்படிப் பேசுவது யாருக்குத் துணை செய்யும்? அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத ஏமாளிகளா தமிழ்நாட்டு மக்கள்? அந்த ஒரு சிலர், தமது சுய முன்னேற்றத்திற்கு உழைப்பதை விட மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது மீண்டும் ஒரு முறை ஆட்சிக் கட்டிலிலேயே நிலைக்க வைத்து விட முடியுமா என்பதற்காகவே கடை விரித்து வைத்துக் கூவி கூவிப் பார்க்கிறார்கள்.
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இதுவரை தமிழகம் கண்டிராத அதிசயமாகச் சில முதலமைச்சர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் வேட்பாளராக காமராஜர் அவர்களோ, அறிஞர் அண்ணா அவர்களோ, நானோ, எம்.ஜி.ஆர். அவர்களோ தேர்தலுக்கு முன்பே அறிவித்துக் கொண்டு களம் புகுந்ததில்லை. முதலமைச் சராகக் கனவு காண்பது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் பலமுனைப் போட்டியால், தி.மு. கழகத்தின் வாய்ப்பு ஒளி மிக்கதாக இல்லை; மங்கலாகவே உள்ளது என்று அந்த ஒரு சிலர் தர்க்க ரீதியாகப் பேசுவ தைப் போல நினைத்துக் கொண்டு தவறான வாதத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர். கடந்த காலத் தேர்தல்களை நீ ஆராய்ந்து பார்த்தால் உனக்கே உண்மை விளங்கும்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்; திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டி யிட்டது; அ.தி.மு.க. (ஜெ) அணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்தது; அ.தி.மு.க. (ஜா) அணியில் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி இருந்தது; காங்கிரஸ் கட்சி, தா. பாண்டிய னின் யு.பி.சி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்தத் தேர்தலில் 202 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க., 169 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு. கழக அணியிலே இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும், ஜனதா கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. (ஜெ) அணி 27 இடங்களையும், அ.தி.மு.க. (ஜா) அணி 2 இடங்களையும் பிடித்தன.
1989 போலவே 1996 தேர்தலிலும் பலமுனைப் போட்டி தான். தி.மு.க. – தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி; அ.தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி; மார்க்சிஸ்ட் கட்சி – ம.தி.மு.க., கூட்டணி; பா.ம.க – திவாரி காங்கிரஸ் கூட்டணி என நான்கு முனைப் போட்டி நிலவியது. அந்தத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க., 173 இடங் களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 168 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் 39 இடங்களிலும், பா.ம.க. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வுக்கு மாற்று என்று அறிவித்து களம் இறங்கிய ம.தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
2006இல் நடைபெற்ற தேர்தலில் மும்முனைப் போட்டி. தி.மு.க. தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், “இந்த இரண்டு கூட்டணிகளையும் வீழ்த்துவேன்” என்று தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சியும் களம் இறங்கின. தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 132 இடங்களில் போட்டியிட்டு 96 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் தனித்தே ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. கூட்டணி 69 இடங்களைக் கைப்பற்றியது. விஜயகாந் தின் தே.மு.தி.க. 232 தொகுதிகளில் போட்டியிட்டு, 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இப்படி பலமுனைப் போட்டிகள் ஏற்பட்ட தேர்தல் களில் தி.மு. கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள் ளது என்பதும்; ஏற்கனவே தமிழகம் மாற்று அரசியல், பல முனைப் போட்டி என்பன வற்றைச் சந்தித்து இருக் கிறது என்பதும் கடந்த கால வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்!
சமூக – பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற, தமிழகத்தை மீண்டும் முன்னேற் றப் பாதையில் இட்டுச் செல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி, தங்களுக்கு அரண் அமைத்துக் கொள்ள வாக்காளர்கள் தயாராகி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் பெருகி வரும் அந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, விழிப்போடு வேகம் குறையாமல் பணியாற்றினால் போதும்; எதிர் மறை சக்திகளின் புலம்பல்களுக்கு ஜனநாயக ரீதியாக முடிவுரை தீட்டப்பட்டு விடும்.
மாற்று அரசியல், தி.மு.க. – அ.தி.மு.க. அணி களுக்குப் போட்டியாக மூன்றாவது அணி, பல முனைப் போட்டி ஆகியவை தமிழகத்தில் ஏற்கனவே பரிசோதித்துப் பார்க்கப்பட்டவைதான். எனினும் பழகிப் போன பழைய காட்சிகளே தற்போது 2016 தேர்தல் மேடைகளிலும் அரங்கேறியிருக்கிறது. “In a Political Landscape dominated by the Dravidian Majors, the Third Front has never been a viable alternative for over five decades” (தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் நல்ல பலத்துடன் விளங்கும் தமிழக அரசியல் களத்தில், கடந்த
50 ஆண்டுகளுக்கு மேலாகவே மூன்றாவது அணி என்பது வெற்றி பெறும் மாற்று அணியாக விளங்கியதில்லை) என்று 25-3-2016 அன்று “தி இந்து” ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத உண்மை யாகும். மேலும் 27-3-2016 அன்று “தி இந்து” தமிழ் நாளேட்டில், “மாற்றம் எனும் சொல் கேட்பதற்கு எவ்வளவு வசீகரிக்கக் கூடியதோ, அவ்வளவுக்குக் கையாளும்போது அபாயகரமானது. கைப்பிடியற்ற வாள் அது. எதிரியைத் தாக்குகிறதோ இல்லையோ; சரியாகக் கையாளவில்லை எனில், கையாள்வோரின் கைகளை அது பதம் பார்ப்பது நிச்சயம். அடிப்படை யில் தூய்மை வாதத்தை முன் நிறுத்தும் சொல் மாற்றம் என்பது. இடதுசாரிகளிடம் தூய்மை வாதப் பேச்சு அதிகம்; தூய்மை வாதப் பேச்சுக்கான செயல்பாடு குறைவு. இடதுசாரிக் கூட்டணியை விஜயகாந்த் கூட்டணியாக மாற்றியதன் மூலம் இடதுசாரிகள் தங்கள் தலையில் மட்டும் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளவில்லை. இத்தனை நாட்களும் எதை மையப் பொருளாகப் பேசினார்களோ, அதையும் அவர்களே கேலிப் பொருளாக்கி விட்டார்கள். கூடவே மூன்றாவது அணிக்கான ஒரு காத்திரமான சாத்தியத்தையும் நாசமாக்கி விட்டார்கள்” என்று எழுத்தாளர் சமஸ் ஆய்வு செய்திருப்பது நினைவில் கொள்ளத்தக்க தாகும்.
இன்று (29-3-2016) “தினமலர்” நாளேடு வெளியிட் டுள்ள கட்டுரை ஒன்றில், “பா.ம.க.வுக்குப் பரவலான பலம் இல்லை. பா.ஜ.க.வுக்கு வெற்றிப் பழத்தை எட்டிப் பறிக்கும் அளவுக்குப் பலம் போதாது. முதல் மூன்று இடங்களில் உள்ள கட்சிகளால் மட்டுமே இந்தத் தேர்தல் பந்தயத்தில் பங்கேற்க முடியும். இதில் முரண்பாடுகள் நிறைந்த மூன்றாவது அணியில் உள்ள தலைவர்கள் பிரச்சாரப் பீரங்கிகளாக இருக்க முடியுமே தவிர, எதிரிகளை வீழ்த்தும் போர் வீரர்களாக மாற முடியாது. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது” என்று ‘தினமலர்’ எழுதியிருக்கிறது. மாற்று அரசியல், மூன்றாவது அணி, நான்காவது அணி, கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் கற்பனையில் தோன்றிய மறு கணமே காலாவதியாகி விட்டன.
உடன்பிறப்பே, எந்த அடிப்படையைக் கொண்டு, எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றி கல் மேல் எழுத்து. எனவே இன்றே களத்தில் கவனம் செலுத்து. 1971ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் நிகழ்த்திய அந்தச் சரித்திரச் சாதனையை – இதுவரை வேறு எவராலும் மிஞ்ச முடியாத அந்த அரிய சாதனையை விஞ்சும் ஆற்றல் நம்முடைய கழகத் திற்குத்தான் உண்டு என்பதை மெய்ப்பித்திடும் வகையில் தீவிரமாகக் களப் பணி ஆற்றிடுக! உடன்பிறப்பே, உன்னால் முடியாதது உலகினில் ஏதும் உண்டோ?’’ என்று தெரிவித்துள்ளார்.