70 களில் இந்தி சினிமாவில் ஹேமமாலினி கனவுக்கன்னியாக திகழ்ந்தார் என்றால், கவர்ச்சி கன்னியாக ஜொலித்தவர், ஜீனத் அமன்.
‘சத்யம் சிவம் சுந்தரம்’ படத்தில் மிரள வைக்கும் தோற்றத்துடன் காட்சி அளித்த ஜீனத் அமன் நேற்று 69 வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார்.
மும்பையில் பிறந்த அவர் பள்ளிப்படிப்பை அங்கு தான் படித்தார். லாஸ்ஏஞ்சல்சில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் முதுநிலைப்பட்டம் படித்த ஜீனத், சிறிது காலம் ‘பெமினா’ பத்திரிகையில் பகுதி நேர நிருபராக பணியாற்றியுள்ளார்.
1970 ஆம் ஆண்டு ‘மிஸ் ஆசிய பசிபிக்’ அழகி போட்டியில் பதக்கம் வென்றார். தெற்கு ஆசியாவில் இந்த பரிசை வென்ற முதல் பெண் இவர் தான்.
13 வயது வரை ஜீனத் என்றே அழைக்கப்பட்டார். இந்தி சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக இருந்த இவர் தந்தை அமனுல்லா, இறந்த பின் தனது பெயரில் அமனை சேர்த்துக்கொண்டு ஜீனத் அமன் ஆனார்.
‘யாதோங்கி பாரத்’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘டான்’, ‘குர்பானி’ ஆகிய படங்கள் இவர் பெயரை இந்தி சினிமா உலகம் நீடித்து இருக்கும் வரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
70 களில் ஜீனத் அமன், ஹேமமாலினிக்கு நிகராக சம்பளம் வாங்கி வந்தார். இவரது ‘தம் மரே தம்’ பாடல் இன்றும் இந்தி சினிமாவின் ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்று என தாராளமாக சொல்லலாம்.
– பா. பாரதி