கோலாலம்பூர்
மலேசிய காவல்துறை இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகிர் நாயக் மலேசியாவில் பொதுக் கூட்டங்களில் பேசத் தடை விதித்துள்ளது.
மும்பை நகரில் உள்ள இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பை நிறுவிய ஜாகிர் நாயக் இஸ்லாமிய இளைஞர்களிடையே தனது உரை மூலம் வன்முறையைத் தூண்டியதாகப் புகார்கள் எழுந்தன. மேலும் கோடிக்கணக்காக இதற்காக அவருக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தைக் கணக்கில் காட்டாமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது. அரசு நடவடிக்கைகளுக்குப் பயந்து அவர் மலேசியாவுக்கு ஓடிச் சென்று அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் உள்ள கேலந்தன் என்னும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூட்டத்தில் மற மதங்களைப் பற்றி தவறாகப் பேசி உள்ளார். ஜாகிர் நாயக் தனது உரையில் மலேசிய இந்துக்கள் மலேசியப் பிரதமரை விட இந்தியப் பிரதமரிடம் அவர் இந்து என்பதால் அதிக விஸ்வாசத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இங்குள்ள சீனர்களை மலேசியாவின் பழைய விருந்தாளிகள் என விமர்சித்தார்.
இதற்கு மலேசிய மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மலேசிய மக்கள் மத வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் வாழ்வதாகவும் இந்தியாவில் இருந்து வந்துள்ள ஜாகிர் நாயக் அந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசியதாகவும் 115 புகார்கள் அளித்துள்ளனர். இதையொட்டி ஜாகிர் நாயக்கிடம் நடந்த விசாரணையில் தனது பேச்சுக்கள் திருத்தி புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மற்றும் விசாரணையின் அடிப்படையில் ஜாகிர் நாயக் இனி பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது என காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் மலேசிய அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு செய்தி தொடர்பாளர் அஸ்மாவதி அகமது, “அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உண்மைதான். நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமையைக் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.