சென்னை:
தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த இசட்பிளஸ் பாதுகாப்பை மத்தியஅரசு விலக்கிக்கொள்வதாக அறிவித்து உள்ளது. இது ஓ.பி.எஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் பலருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ்-சுக்கு மத்தியஅரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது கடந்த 2017ம் ஆண்டு முதல் துப்பாக்கிகள் ஏந்திய 8 காவலர்கள் கொண்ட மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து பலருக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கிகொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும், இதையடுத்தே, இன்று முதல் ஓ.பி.எஸ்.சுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கப்படுவதாக சி.ஆர்.பி.எஃப் கடிதம் எழுதி உள்ளது.
இனிமேல் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்-சுக்கு மற்ற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.
மத்திய அரசு திடீரென ஓ.பி.எஸ்ஸுக்கான பாதுகாப்பை நீக்கியுள்ளது அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மோடி அரசு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.