டில்லி:

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், உலக கோப்பை போட்டிக்கு தேர்வாத நிலையில், அனைத்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

கடநத  2007 ம் ஆண்டு மற்றும்  2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை போட்டியில்  இந்தியா வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

கடந்த 2000வது ஆண்டில் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் டிராபி தொடரில், கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்தவர் யுவ்ராஜ் சிங், அதே தொடரில் ஆஸ்திரே லியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 84(80) ரன்கள் எடுத்து பரபரப்பாக பேசப்பட்டார்.

தொடர்ந்து அணியில் ஆடி வந்த யுவ்ராஜ் சிங் கடந்த  2006 வது ஆண்டுக்கு பிறகு அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். கடந்த  2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை புரிந்தார்.

தொடர்ந்து  2011ல் உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார்.

இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட சில மாதங்கள் விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகி,  தீவிர சிகிச்சை பெற்று புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார். இதன் காரணமாக அவரது பிட்னஸ் கேள்விக்குறியான நிலையில், மீண்டும் தனது உடற்தகுதியை நிரூபித்து அணியில் சேர்ந்து ஆடி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அணியில் இடம்பெறாத நிலையில், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இனி ஆட மாட்டேன் என்று  தனது ஓய்வை தெரிவித்து உள்ளார்.

யுவராஜ்சிங்,  இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 8,701 ரன்கள் அடித்துள்ளார். அதுபோல, 40 டெஸ்ட் போட்டிகளில்  ஆடி 1,900 ரன்களும்,, 58 டி20 போட்டிகளில்  விளையாடி 1,177 ரன்களும் குவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களும், 52 அரை சதங்களும் அடித்த யுவராஜ் சிங்,  தோனி வென்ற இரு உலகக் கோப்பை போட்டியில் பங்குகொண்டது வரலாற்று சிறப்புமிக்கது.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம் வந்த யுவராஜ் சிங்  2007-08 காலகட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார்.

இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அப்போது,  என்னை நம்புவதை நான் எப்போதும் நிறுத்தியது இல்லை என்று கூறினார். யுவராஜ்சிங்கின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.