சண்டிகார்: அகமதாபாத் போன்ற பிட்ச்சில், அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களைப் பந்துவீச வைத்தால், 800 முதல் 1000 விக்கெட்டுகள் வரை வீழ்த்துவார்கள் என்று பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ்சிங். இதன்மூலம் அவர் பிட்ச்சை கிண்டல் செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம், அவர் அக்ஸார் படேல் மற்றும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவ்ராஜ் சிங் கூறியுள்ளதாவது, “2 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துள்ளதால், இது சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் இருவரும் அகமதாபாத் மைதானத்தில் பந்து வீசியிருந்தால், அவர்கள் இந்நேரத்தில் 800 முதல் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள். எப்படியாயினும், அருமையாகப் பந்துவீசிய அக்ஸார் படேலுக்கு வாழ்த்துகள். அஸ்வின், இஷாந்த் ஷர்மாவுக்கும் வாழ்த்துகள்” என்றுள்ளார் அவர்.

ஆடுகளத்தைப் பற்றிக் குறைசொல்லிவிட்டு, இந்த ஆடுகளத்தில் ஹர்பஜன், கும்ப்ளேவுக்கு வாய்ப்பு கொடுத்தால், ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று கூறியுள்ளதன் மூலம், அஸ்வின், அக்ஸர் படேலின் திறமையை குறைத்து மதிப்பிடுவதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.