அமராவதி:

ந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்ட நிலையில், புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ந்தேதி பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அங்கு தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக, மற்றும் காங்கிரஸ் என 4 முனை போட்டிகள் நிலவி வந்தன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று  காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கையில், லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலுமே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆந்திராவில் உள்ள  25 மக்களவை தொகுதியிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, மொத்தமுள்ள 175 தொகுதிகளில்  ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  141 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  தெலுங்குதேசம் கட்சி வெறும் 26 இடங்களில்முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம்  ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வாகிறார். அவர்  வரும் 30ம் தேதி ஆந்திரா முதல்வராக ஜெகன் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி கிங்மேக்கராக ஜெகன்மோகன் ரெட்டி உருவாகி உள்ளார்.