விஜயவாடா: ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிதான் அதிகளவு குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக, இரண்டு அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில், 97 பேர் குற்ற வழக்குகள் உடையவர்கள். இது 57% ஆகும். இதற்கடுத்து, தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் வருகிறது.
இக்கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில், 48 பேர் குற்ற வழக்குகள் உடையவர்கள். இது 28% ஆகும். மேலும், தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே முதலிடம் வகிக்கிறது.
அக்கட்சியின் 57 வேட்பாளர்கள் இக்குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள். இது 33% ஆகும். இதற்கடுத்து சந்திரபாபு நாயுடுவின் கட்சி வருகிறது. அக்கட்சியின் 27 வேட்பாளர்கள் இக்குற்றச்சாட்டை சுமப்பவர்கள். இது 16% ஆகும்.
மேலும், ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 2007 வேட்பாளர்களில், 632 பேர் கோடீஸ்வரர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
– மதுரை மாயாண்டி