ஆந்திர மாநில நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினம் உருவெடுத்துவருவதாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று டெல்லியில் அதற்கான ஆயத்த மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஜெகன், ஆந்திர மாநிலத்தை உலகின் முன்னணி தொழில் வளர்ச்சி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆந்திராவில் தொழில் தொடங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான உதவிகளை மாநில அரசு தயங்காமல் செய்யும் என்றும் முதலீட்டாளர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் ஆந்திராவில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆந்திர அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஜெகன் நாட்டில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 11 தொழில் பூங்காக்களில் மூன்று ஆந்திராவில் வரப்போவதாகக் கூறினார்.
ஏற்கனவே கும்மிடிபூண்டியை ஒட்டிய தடா பகுதிக்கு அருகில் ஸ்ரீ சிட்டி என்ற பெயரில் கேட்பரி உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் இயங்கிவரும் தொழிற்பூங்கா உள்ள நிலையில் தற்போது விசாகப்பட்டினம் ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாக மாறிவருவதாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் கூறியிருப்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.