மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தனின் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
நேற்று முன் தினம் ஜம்மு காஷ்மீரில் நுழைந்த பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அப்போது இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்து நொறுங்கியது. அதிலிருந்து தப்பிய இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். பாகிஸ்தானின் அபிநந்தன் பிடிப்பட்ட வீடியோ, அவரை அவர்கள் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு எதிராகவும், அபிநந்தனுக்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அபிநந்தன் தொடர்பான 11 வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு யூடியூப் நிறுவனத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
அதன்படி, அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இது தொடர்பாக கூகுள் செய்தி தொடர்பாளர் பேசும்போது, “ யூடியூபில் இடம்பெறும் வீடியோ காட்சிகளை நீக்குவது தொடர்பாக சட்டப்படி விடுக்கப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது “ என்றார்.