கடலூர் மாவட்டம் விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இரவு நேரத்தில் லாரிகளை சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறி வைத்து தாக்கிய இந்த கும்பல் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் போன்றவைகளை பறித்துச் சென்றுள்ளது.
இந்த தொடர் வழிப்பறி குற்றச்சம்பவத்தில் இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைகளில் இரவு நேரம் மட்டுமன்றி பகல் நேரத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதை அடுத்து காவல் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் லாரி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த அறிவிப்புகளை ஆங்காங்கே வைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.