சொந்த ஊருக்கு வழிகாட்டிய வெங்காயம்.. லாபத்தைக் கொட்டிய கொரோனா மூளை

’ரூம்’’ போடாமல் யோசித்து, ஊரடங்கை மீறி சொந்த ஊருக்குப் பத்திரமாகச் சென்ற உ.பி.மாநில இளைஞர் ஒருவர் குறித்த வியப்பூட்டும் செய்தி இது:

அவர் பெயர் , பிரேம் மூர்த்தி பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

ஊரடங்கில் ரொம்பவே தவித்துப் போனார். மும்பையில் இருக்க அவருக்கு ஆசைதான்.

ஆனால் நாளுக்கு நாள் மும்பையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், சொந்த ஊருக்குச் சென்றே தீருவது என்று முடிவு செய்தார்.

எந்த வாகனமும் ஓடவில்லை.

என்ன செய்வது?

காய்கறிகளை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்ல தடை ஏதும் இல்லை அல்லவா?

காய்கறிகளைக் கொண்டு செல்வதாகப் போக்குகாட்டி அலகாபாத் செல்வது என்று முடிவு எடுத்துச் செயல்பட ஆரம்பித்தார்.

நாசிக் பக்கம் உள்ள பிம்பல்கான் என்ற ஊரில் உள்ள சந்தையில் தர்ப்பூசனி வாங்கி , அதனை லாரியில் மும்பை கொண்டு வந்து விற்றார்.

கொஞ்சம் லாபம் கிடைத்தது.

அந்த பணத்தில் பம்பல்கான் சென்று  25 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி ஒரு லாரியில் ஏற்றி, வண்டியை அலகாபாத் விடச்சொன்னார்.

லாரி வாடகை, 77 ஆயிரம் ரூபாய்.

மும்பையில் இருந்து அலகாபாத் இடையே உள்ள ஆயிரத்து 200 கி.மீ. தூரத்தை 3 நாட்களில் கடந்து ஊர் வந்து சேர்ந்தார்.

பாண்டே,  காய்கறி வியாபாரி வேடம் தரித்திருந்ததால் ,அவரது பயணத்தை எந்த சோதனை சாவடியும் தடுக்க வில்லை.

வெங்காயத்தை ஊரில் இறக்கச் செய்து விட்டு,லாரியை மும்பை அனுப்பி விட்டார்.

வெங்காயத்தை விற்கும் போது, அதனை வாங்கச் செலவிட்ட தொகையுடன் லாரி வாடகையும், லாபமும் பாண்டேக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

–  ஏழுமலை வெங்கடேசன்