சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல மால்-ஆன எக்ஸ்பிரஸ் அவென்யூவில், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயுவால் தாக்கப்பட்ட தம்பியை காப்பாற்றிய அண்ணன், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ளது எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற பிரபலமான தனியார் வணிக வளாகம். இங்குள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் வகையில், இன்று அதிகாலை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார் ,யுவராஜ் உள்பட  5 தொழிலாளிகள்  கழிவுநீர் தொட்டிக்குள்  இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதனுள் இருந்து வெளியான விஷவாயுவால், ரஞ்சித் குமார் மயக்க நிலைக்கு சென்ற நிலையில், அவருடைய  சகோதரர் அருண்குமார் உடனடியாக கழிவுநீர் தொட்டியில்  இறங்கி ரஞ்சித் குமாரை காப்பாற்றிய நிலையில், அவர் வெளியே வர முயன்றபோது, அவரும் விஷவாயுவால் தாக்கப்பட்டார். இதில், அருண்குமார் பிரதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சாலை காவலர்கள், உயிரிழந்த அருண்குமார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தி அகற்றக்கூடாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு கூறியும், எச்சரிக்கை விடுத்தும், அதை பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல், மனிதர்களையே மீண்டும் மீண்டும் கழிவுநீர் தொட்டி போன்ற பணிகளுக்கு உபயோகப்படுத்துவதால், உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது.