தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து அதிகளவு நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரெட் ஹில்ஸ் – காரனோடையை அடுத்த திருக்கண்டலம் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த சஞ்சய் என்ற இளைஞர் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அவர் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போதே நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து அவர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில் பல்வேறு கிராமங்களில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் இரவு நேரங்களிலும் மீன் பிடித்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.