கும்மிடிப்பூண்டி: சாலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில், வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய போது இளைஞர் தீக்குளித்தார். தீக்குளித்த ராஜ்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஒ. பாக்கிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது , அந்த பகுதியில் குடியிருந்து வரும் இளைஞர் ராஜ்குமார் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு ஓடினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு 60 சதவிகித்துக்கும் மேல் தீக்காயம் உள்ளதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் 3 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.