டில்லி:

அடுத்த மாதம் முதல் ஊழியர்கள் வேறு பணிக்கு மாறினாலும் உடனடியாக பி.ஃஎப். கணக்கும் மாறும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

‘‘அடுத்த மாதம் முதல் ஊழியர் ஒரு பணியில் இருந்து வேறு பணிக்கு மாறினால் உடனடியாக பிஎப் கணக்கும் தானியங்கி முறையில் மாறிவிடும்’’ என்று பி.ஃஎப். கமிஷனர் விபி ஜாய் தெரிவித்துள்ளார்.

பி.ஃஎப். கணக்கு நடைமுறையில் சில மாற்றங்களை அதன் முதன்மை கமிஷனர் விபி ஜாய் மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் கணக்கை எளிதில் இயக்கும் வகையில் இந்த மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

முதிர்வு தேதிக்கு முன்பே கணக்குகளை முடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதன் மீதான சேவையை அதிகரிக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த வகையில் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது பி.ஃஎப். கணக்கு உடனடியாக முடிக்கப்படுகிறது. அடுத்த நிறுவனத்திற்கு சென்றவுடன் புதிய கணக்கு தொடங்கும் நிலை உள்ளது.

பணி மாறினாலும் தங்களது பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி படுத்தும் வகையில் எந்த ஒரு விண்ணப்பமும் இல்லாத வகையிலான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

தற்போது பி.ஃஎப். கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்காலத்தில் மூன்று நாட்களுக்குள் தங்களது பணத்தை புதிய கணக்குக்குள் கொண்டு வந்து விட முடியும்.

இதற்கு ஆதார் பரிசோதனை போதுமானதாகும். இந்த சோதனை முடிந்த பிறகு எவ்வித விண்ணப்பமும் இன்றி நாடு முழுவதும் ஒரு ஊழியர் எங்கு பணிக்கு சென்றாலும் பணத்தை புது நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களை தக்க வைக்க வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது என்று ஜாய் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ பி.ஃஎப். பணத்தை குழந்தைகள் கல்வி, வீடு வாங்குதல், தீவிர சிகிச்சை போன்ற சமயங்களில் மட்டுமே எடுக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு சமுதாய பாதுகாப்பு கிடைக்கும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பி.ஃஎப். பணத்தை எடுக்க வலியுறுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.