அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில், புத்தாண்டு தினத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட 27 வயதான இந்திய இளம்பெண் நிகிதா கோடிஷாலா, தனது முன்னாள் காதலனின் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்ததாக நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவத் துறை நிபுணரான நிகிதா, மருந்தியல், மருத்துவ ஆய்வு, சுகாதார தகவல் தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆஃப் பார்மசி பட்டம் பெற்ற அவர், பின்னர் அமெரிக்காவின் மேரிலாந்து பால்டிமோர் கவுண்டி பல்கலைக்கழகத்தில் Health Information Technology-யில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
மேரிலாந்தின் எலிகாட் சிட்டியில் வசித்து வந்த நிகிதா, கடைசியாக 2025 டிசம்பர் 31-ம் தேதி, புத்தாண்டு முன்னிரவு, அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் காணப்பட்டார்.
அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளாததால், கவலை அடைந்த நண்பர்கள் ஜனவரி 2-ம் தேதி அவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். சமூக வலைதளங்களிலும் நிகிதாவை தேடி பதிவுகள் பகிரப்பட்டன.
நிகிதா காணாமல் போனதாக அர்ஜுன் சர்மாவே போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதே நாளில், அவர் அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு விமானம் ஏறி தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி போலீசார் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கு கத்தி குத்துக்காயங்களுடன் நிகிதாவின் உடல் மீட்கப்பட்டது.
அர்ஜுன் சர்மா மீது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய விசாரணை அமைப்புகள், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அமெரிக்கா – இந்தியா இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக (Extradition) ஒப்பந்தம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இது சில மாதங்கள் வரை ஆகலாம்.
வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், நிகிதாவின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தேவையான தூதரக உதவிகள் அனைத்தையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தகவல் உள்ளவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு அமெரிக்க காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
[youtube-feed feed=1]