கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார்.

யாதகிரி மாவட்டத்தின் வடகேரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தத்தப்பா என்பவரும் காடெம்மா என்பவரும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி மூன்று மாதங்களே ஆன இந்த புதுமணத் தம்பதி இன்று காலை கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதி மீதான பாலத்தை கடந்து சென்றுள்ளனர்.

அப்போது இவர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டனர்.

கணவர் முதலில் தனது மனைவியின் புகைப்படத்தை எடுத்தார், பின்னர் தன்னை புகைப்படம் எடுக்கச் சொன்னார். செல்பி எடுப்பதாகக் கூறிய மனைவி புகைப்படம் எடுத்தபோது தத்தப்பா ஆற்றில் விழுந்தார்.

பின்னர், ஆற்றில் நீந்தி ஒரு பாறை மீது அமர்ந்த நிலையில், அந்த வழியாக சென்ற சிலர் இதனைப் பார்த்து அவரை கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

இதையடுத்து கயிற்றை தூக்கிப் போட்டு அந்த வாலிபரை ஆற்றில் இருந்து பாலத்தின் மீது ஏற உதவினர்.

பாலத்தின் மீது ஏறிய தத்தப்பா தன்னை தனது மனைவி காடெம்மா ஆற்றில் தள்ளிவிட்டதாகக் கூறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அந்த வீடியோவில், கயிற்றின் உதவியுடன் பாலத்தில் ஏற தத்தப்பா முயற்சி செய்யும் போது பாலத்தின் மீது நின்றிந்த அவரது மனைவி “தனது கணவர் தத்தப்பா ஆற்றில் விழுந்து விட்டார்” என்று அவரது உறவினரிடம் கூறிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் மேலே ஏறி வந்த தத்தப்பா, மனைவி தான் பிடித்து தள்ளியதாக அங்கிருந்தவர்களிடம் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் போனை பிடுங்கி “காடெம்மா தான் என்னை ஆற்றில் தள்ளி விட்டார்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து இருவரையும் வீட்டிற்கு வரவழைத்த அவர்களது பெற்றோர்கள் இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், உண்மையை அறிய இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டதாக அப்பகுதி மட்டுமன்றி சமூக வலைத்தளத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.