சென்னை: ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆதரவு தெரிவித்து உள்ளார்.  நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன் என்று வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இந்திய மல்யுத்த வீராங்கனை  வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். ஆனால், திடீரென ஒலிம்பிக் கமிட்டி,   வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோவுக்கு மேல், அதாவது 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதை  இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பும் உறுதி செய்தது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்புக்கு  பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் பின்னடைவு, வலிமை, இறுதிப் போட்டிக்கான பயணம் கோடிக்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில கிராம் உடல் எடையினால் ஏற்பட்டுள்ள தகுதி இழப்பு உங்கள் மன உறுதியையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான மன உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுவிட்டீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முயற்சிகளை எடுத்தபோதிலும், அவரது தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் தெரிவித்துள்ளது.