டெல்லி:

குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழும் மனைவி ஒட்டுண்ணியாக வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு கணவரின் வருமானத்தில் வாழக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாதாந்திர பராமரிப்பு தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை நிராகரித்து டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத் தகராறு தொடர்பாக கணவரை பிரிந்த ஒரு பெண்ணுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2008ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தொகை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று 2015ம் ஆண்டில் அந்த பெண் அதே நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட் 10 சதவீதம் கூடுதலாக ரூ. 5 ஆயிரத்து 500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த தொகையை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அந்த பெண் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.கே. திரிபாதி விசாரித்தார்.

“மனுவில் அந்த பெண் தான் எம்.ஏ., பி.எட் மற்றும் எல்.எல்.பி படித்துள்ளதால் இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் கணவரை விட அதிக கல்வி தகுதி பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் அவரால் சுயமாக சம்பாதிக்க முடியும். அவர் வீட்டில் சும்மா இருந்து கொண்டு கணவரின் வருவாயில் ஒட்டுண்ணியாக வாழ வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மாஜிஸ்திரேட் 2015ம் ஆண்டில் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். ‘‘சமூகத்தில் நிலவும் உண்மை தன்மையை கீழமை நீதிமன்றங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அந்த பெண் எதற்காக தனக்கு மாதாந்திர தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற காரணத்தை குறிப்பிட தவறிவிட்டார். செலவு அதிகரித்திருப்பதை அவர் நிரூபிக்க தவறிவிட்டார்’’ என்று நீதிபதி தெரிவித்தார்.