பிரயாக்ராஜ்
உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார்.
தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை ஒட்டி நேற்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இதுவரை 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததற்கு, உத்தரப்பிரதேச மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் இன்று (ஜன.30ம் தேதி) முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை VVIP (விவிஐபி) எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மகா கும்பமேளா நடைபெறும் பகுதி நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த நிலையில், உ.பி. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.