டில்லி

உத்திரப் பிரதேச முதல்வர் யோகிக்கு தேர்தல் ஆணையம் காதல் கடிதம் எழுதுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துளார்.

தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளை பாஜகவினர் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அவற்றின் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த நமோ டிவி தொடக்கம், ரெயில்களில் சவுக்கிதார் கப்புகள் விநியோகம் போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இந்த விதி மீறல்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவலா, “தேர்தலின் நன்னடத்தை விதிமுறை (MODEL CODE OF CONDUCT) என்பது இப்போது மோடியின் நன்னடத்தை விதிமுறை (MODI CODE OF CONDUCT) என ஆகி உள்ளது. யோகி ஆதித்யநாத் ராணுவத்தை அவமதிக்கிறார். ஆனால் தேர்தல் ஆணையம் அவருக்கு கண்டிப்பு கடிதத்துக்கு பதில் காதல் கடிதம் எழுதுகிறது” என டிவிட்டரில் பதிந்துளார்.

அவர் மற்றொரு பதிவில், “காங்கிரஸ் கட்சியின் பிரபல திட்டமான நியாய் திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் குறை கூறுகிறார். அது குறித்து புகார் செய்தால் தேர்தல் ஆணையம் குழந்தைகளுக்கு சொல்வது போல் அப்படி சொல்வது தவறு. இனி அப்படி சொல்லக்கூடாது என அறிவுரை வழங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.