சோனிபாட்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டார். இவரை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் 1 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் ஒலிம்பிக் போட்டியில்வெற்றி பெற்று பிரபலமான ஒரு விளையாட்டு வீரர் ஒருவர் ஒரு ரூபாயை மட்டும் வரதட்சனையாக பெற்றுக் கொண்டு திருமணம் செய்துள்ளார். அவர் குறித்த விபரம் இதோ…
2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வெங்கல பதக்கம் வென்றவர் யோகேஸ்வர் தத். ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்பகவான் சர்மாவின் மகளுக்கும் இவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. சீத்தாள் என்ற அந்த மணகளை இவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டார். வேறு எந்த வகையிலான பரிசு, பணம் ஆகியவற்றை இவர் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சனையாக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14ம் தேதி சோனிபாட்டில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அந்த ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டார்.

மல்யுத்த போட்டியில் சிறந்து விளங்க வேண்டும். வரதட்சனை வாங்க கூடாது என்று இரு விஷயங்களை முடிவு செய்து வைத்திருந்தேன். முதல் விஷயம் ஏற்கனவே சாதித்துவிட்டேன். இரண்டாவது விஷயத்தையும் இப்போது நடத்தி முடித்துவிட்டேன் என்று யோகேஸ்வர் பெருமையுடன் தெரிவித்தார். அந்த ஒரு ரூபாயையும் யோகேஸ்வர் குடும்பத்தினர் ஏன் ஏற்றுக் கெண்டனர் என்று டுவிட்டரில் கேள்வி கணைகள் தொடுத்த வண்ணம் உள்ளது.