சென்னை
நேற்றிரவு சென்னையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பசலனம் காரணமாகவும் மழை கொட்டுகிறது. சென்னையில் கடந்த 3 தினங்களாகவே மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது.
இங்கு காலையில் இருந்து மாலை வரை வெயில் கொளுத்துவதும், பின்னர் மாலைக்கு பிறகு கரு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டுவதுமான நிலை நீடிக்கிறது. நேற்று பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மாலையில் அப்படியே சீதோஷ்ண நிலை மாறி, கருமேகங்கள் சென்னையில் சூழத் தொடங்கியது.
நேற்றிரவு சரியாக இரவு 7.30 மணிக்கு மேல் சென்னையில் பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இது மிதமான மழையாக தொடங்கி பின்னர் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
.சென்னை எழும்பூர், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போன்ற இடங்களிலும், குறிப்பாக மயிலாப்பூர், தென் சென்னையில் பல இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது.
சென்னையில் பெய்த இந்த திடீர் கனமழையால் பல இடங்களில் சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் ஓடின. சில இடங்களில் குளங்களில் தேங்கி கிடக்கும் நீர் போல மழை நீர் தேங்கி கிடந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த கனமழை சுமார் 30 முதல் 45 நிமிடம் வரை நீடித்தது.