லக்னோ
நேற்றைய ஐ பிஎல் போட்டியில் லக்னோ அணி கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்துள்ளது.
லக்னோவில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்கள் மூன்று பேர் விரைவில் ஆட்டமிழந்த நிலையிலும், கேப்டன் குர்னல் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இவ்வளவு ரன்களை குவித்தது.
குர்னல் பாண்டியா 49 ரன்கள் சேர்த்த நிலையில், காயம் காரணமாக பேட்டிங்கை தொடர முடியாமல் வெளியேறினார். அதேநேரம், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மும்பை பவுலர்களை வெளுத்து வாங்கினார். அவர் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பிறகு 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இணை சிறப்பான ஓப்பனிங் தந்தது. இருவரும் பார்ட்னர்ஷிப் மூலம் 90 ரன்கள் எடுத்தனர். ஆயினும் 10வது ஓவரிலேயே இந்தக் கூட்டணியை பிரிக்க முடிந்தது. ரவி பிஷ்னோய் முதல் விக்கெட்டாக 37 ரன்கள் ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.
ரவி பிஷ்னோய் தனது அடுத்த ஓவரில் இஷான் கிஷனையும் அவுட் ஆக்கினார். இஷான் கிஷன் 59 ரன்கள் எடுத்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், நேஹல் வதேரா 16 ரன்களிலும் அவுட் ஆக்க மும்பை நெருக்கடியைச் சந்தித்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. சமீப காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பினிஷர் ரோலில் களமிறக்கப்பட்டு வரும் டிம் டேவிட் இந்தப் போட்டியிலும் அசத்தினார். நவீன் உல் ஹக் வீசிய 19வது இரண்டு சிக்ஸர்கள் அவர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது. இறுதி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
கடைசி ஓவரை வீசிய மொஹ்சின் கான் சிறப்பாக பந்து வீசி டிம் டேவிட் மற்றும் கிரீன் இருவரையும் பெரிய ஷாட்கள் ஆட விடாமல் தடுத்தார். அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார்.
இதன் மூலம் மும்பை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றிபெற்றது.