லாகூர்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய அரசியல் தலைவருமான இம்ரான் கான் மூன்றாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் அணியின் தலைவராக இருந்துள்ளார். இவரது தலைமையில் 1992ஆம் ஆண்டு பாக் உலகக் கோப்பையை வென்றது. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் தெஹ்ரிக் ஈ இன்சாஃப் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு இம்ரான்கான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இரு மகன்கள் பிறந்த பின் ஒன்பது ஆண்டு காலம் திருமண வாழ்க்கை கசந்து போனதால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். கடந்த 2015ஆம் ஆண்டில் தொலைக்காட்சி பிரபலம் ஆன ரேஹாம் கான் என்பவரை இம்ரான் திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணம் 10 மாதங்களில் முறிந்து மீண்டும் விவாகரத்து பெற்றார்.
சமீப காலமாக பஷ்ரா மேனகா என்பவருடன் இம்ரான் கானுக்கு நட்பு உண்டாகியது. ஆன்மீக ஆலோசனைகள் அளித்து வரும் மேனகா இம்ரான் கானுக்கு அவருடைய கட்சி பற்றிக் கூறிய ஆரூடங்கள் பலிக்கவே இருவருக்கும் மேலும் நெருக்கம் உண்டானது. இந்த நெருக்கமான நட்பினால் மேனகா தனது கணவரை விவாகரத்து செய்தார். மேனகாவுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.
மேனகா மற்றும் இம்ரான் கான் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். நேற்று லாகூரில் உள்ள மேனகாவின் சகோதரர் இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்துக்கு மிகவும் குறைவான நபர்களே அழைக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கானுக்கும் அவர் சகோதரிகளுக்கும் தற்போது உறவு முறை சரியில்லாததால் அவர் தனது சகோதரிகளைக் கூட திருமணத்துக்கு அழைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
ஆனால் இருவரின் திருமணத்துக்கு பல்வைகத் துறை பிரமுகர்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்திகள் பதிந்த வண்ணம் உள்ளனர்.