டில்லி
நேற்று கூகுள் சேவைகள் சிறிது நேரம் முடங்கியதால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூகுள் சேவைகள் உலகில் முன்னணியில் உள்ளன. இணையத்தில் தேடுதல், யூ டியூப் வீடியோக்கள், ஜி மெயில் உள்ளிட்ட பல சேவைகள் கூகுள் மூலம் நிகழ்ந்து வருகின்றன. கிட்டத்தட்ட இணையம் என்றால் கூகுள் எனவே ஆகி விட்டது. பல இணைய சேவைகளும் கூகுள் குரோம் மூலமே பலரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதால் இணைய பயன்பாட்டாளர்களுக்குக் கூகுள் இன்றியமையாதது ஆகி உள்ளது.
நேற்று இந்திய நேரப்படி கூகுளின் முக்கிய சேவைகளான யூ டியூப், ஜி மெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்டவை திடீரென முடங்கின, முக்கியமாக யூ டியூப் வீடியோ சேவை முடங்கியதால் பலரும் மிகவும் பாதிப்பு அடைந்தனர். இந்த நேரத்தில் சுமார் 54% பயனாளர்கள் யூ டியூப் தளத்தைப் பார்க்க இயலாமல் போனது.
இதையொட்டி டிவிட்டரில் பலரும் இதை பகிர்ந்துக் கொண்டனர். இந்த தகவல் யுடியூப் டவுன், கூகுள்டவுன் என்னும் ஹேஷ்டேக்குடன் பரவி வைரலாகியது, இந்த சேவைகள் சில மணி நேரங்களுக்குப் பிறகு வேலை செய்யத் தொடங்கின, முதலில் ஜி மெயில் மற்றும் யு டியூப் சேவைகள் தொடங்கி அதன் பிறகு மற்ற சேவைகளும் தொடங்கின.
இவ்வாறு சேவைகள் முடங்கியது குறித்து கூகுள் நிறுவனம் எவ்வித காரணமோ விளக்கமோ அளிக்காமல் உள்ளது.