விருதுநகர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி மோசடி வழக்கில் 2 ஆம் கட்ட விசாரணை நேற்று நடந்தது.
முந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதையொட்டி கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவானார். அவரை சிறப்பு படையினர் தேடி சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு கண்டுபிடித்து கைது செய்தனர்.
பிறகு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றார். கடந்த 12 ஆம் தேதி விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவரிடம் முதல் கட்ட விசாரணை நடந்தது. அந்த 10 மணி நேர விசாரணையில் அவரிடம் மொத்தம் 134 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் ராஜேந்திர பாலாஜி முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
எனவே நேற்று 2 ஆம் கட்ட விசாரணை நடந்துள்ளது. இதற்காக விருது நகர் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் சுமார் 40 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவர் அளித்த பதில்கள் குறித்த விவரம் வெளியாகவில்லை. இந்த விசாரணை காலை 11 மணி முதல் மாலை 6.45 மணி வரை நடந்துள்ளது.