திருவனந்தபுரம்

தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.  ஆயினும் கடந்த ஒரு வாரமாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் இருந்தது.  ஆனால் நேற்று முன் தினம் முதல் மழை தீவிரம் அடைந்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 16 ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனவே  இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது.  இந்த எச்சரிக்கை வயநாடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு விடப்படவில்லை.

நாளையும் 16 ஆம் தேதியும் இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  மேலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் 16 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.