சென்னை, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் வெளியிட்டு உள்ளது. சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் 4ந்தேதி வரை மழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை,சேப்பாக்கம்,சாந்தோம், பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி , அடையாறு, அம்பத்தூர், கோயம்பேடு, மதுரவாய், மாதவரம், ரெட்ஹில்ஸ் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் துயரத்துக்கு ஆளானார்கள்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் வருகிற 3-ந் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது
நாளை (செவ்வாய்க்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால், அங்கும் நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை மறுதினமும் (புதன்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (வியாழக்கிழமை) இதேபோல், சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.